Blogger Tricks

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Pages

வியாழன், 31 டிசம்பர், 2015

செம்மொழிக் கட்டுரை

           பொருட்பாலில் வள்ளுவர் கருத்தும் உரைகளின் பொருத்தப்பாடும்

இக்கட்டுரையானது வள்ள்வரின் பொருட்பாலிலுள்ள குறட்பாக்களின் கருத்தையும் பல்வேறு அ றிஞர்களின் ரைகளின் பொருத்தப்பாடுகளையும் விளக்குவனவாக அமைகிறது.

மணக்குடவர் பொருட்பாலாவது பொருளின் பகுதி என்று கொள்ளப்படும் பொருள் என்றது மக்களை உடைத்தாகிய நிலம் பகுதியாவது அந்நிலத்தை ஆளுதற்குரிய அரசரது தன்மையும் அவரது ஆளுதற்குச் செய்யும் திற்களும் அதற்குத் துணையான அமாத்தியர் இலக்கணமும், அவர் செய்யும் திறன்களும் அவ்விருவரானும் உண்டாக்கப்பட்ட நாடும் அரணும் பொருளும் படையும் ஆகிய இவற்றினது திறன்களும், அறம் பொருட்கும் பொருள் உடையார்க்கும் கேடுவரும் திறன்களும், அரசியலும், அமைச்சியலும், நட்பியலும் , துன்பவியலும், குடியியலும், என அடங்கும் என்கிறார். 
இதனுள் இறைமாட்சி முதலாக இடுக்கண்  அழியாமை ஈறாகக்கூறிய அதிகாரம் இருபத்தைந்தும் பெரும்பான்மையும் அரசர்க்கு உரியவாதலின் அரசியல் என்றும், அமைச்சு முதலாக அவையஞ்சாமை ஈறாகக் கூறிய அதிகாரம் பத்தும் பெரும்பான்மையும் அமைச்சர்க்கு உரியவாதலின் அமைச்சியல் என்றும், நாடு முதலாகப் படைச்செருக்கு ஈறாகக்கூறிய அதிகாரம் ஐந்தும் பொருட்பகுதியாதலின் பொருளியல் என்றும், நட்பு முதலாகக் கூடா நட்பீறாகக் கூறிய அதிகாரம் ஐந்தும் நட்பின் பகுதியாதலின் நட்பியல் என்றும், பேதைமை முதலாக மருந்து ஈறாகக் கூறிய அதிகாரம் பன்னிரண்டும் கேட்டுக்குக் காரணமாதலின் துன்பவியல் என்றும், குடிமை முதலாகக் கயமையீறாகக் கூறிய அதிகாரம் பதின்மூன்றும் மக்களது இயல்பு கூறுதலின் குடியியல் என்றும் அறப்பொருட்பால் கூறிய அதிகாரம் எழுபதும் ஆறு பகுதியாயின என்கிறார்.

இறைமாட்சி என்பதற்குப் பரிமேலழகர் அதாவது அவன்தன் நற்குண நற்செய்கைகள் உலகபாலர் உருவாய் நின்று உலகம் காத்தலின் இறை என்கிறார். திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக்கண்டேனே என்னும் என்று பெரியாரும் பணித்தார் எனக் கூறுவார். மணக்குடவர் : இதனுள் இறைமாட்சியாவது இறைவனது உண்மை கூறுதல் இவ்வதிகாரத்துள் உரைக்கின்ற பொருள் அரசரை நோக்கிற்றாதலானும் அரசன்  மக்களிற் சிறந்தானாதலானும் இவ்வதிகாரம் முன் கூறப்பட்டது எனக் காரணம் என்கிறார். 

பாரதியார் : இறைமாட்சியாவது இராசநீதியைச் சொல்லுதல் என்பார்.

காளிங்கர் : இப்பால் பொருட்பகுதிதான் மலிகடல் உலகத்து மக்கட்கெல்லாம் நலிவற நடத்தல் நன்கெனின் அதூஉம் அவ்வரசர் செய்பொருள் முதலாகக்கொண்டு மற்றும் அவர் வழிப்பிறர் பொருள் அமைத்தன் பொருட்டாக மற்றும் அவை அனைத்திற்கும் அன்னவர் மாட்சி முறைப்படவேண்டும் முறைமை நோக்கி இறைமாட்சிமை அறிவிக்கின்றது என்றும் கூறுவார். இதில் முதல் குறளானது அரனின் இலக்கணம் கூறுகிறது.

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் 
உடையான் அரசருள் ஏறு ( 381) இக்குறளுக்குப் 
பரிமேலழகர் படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறு அங்கங்களையும் உடையவன் அரசருள் ஏறு போல்வான் என்பார். 

ஈண்டுக்குடி என்றது அதனை உடைய நாட்டினை அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு என்பதே முறையாயினும் ஈண்டுச் செய்யுள் நோக்கிப் பிறழ வைத்தார். ஆறும் உடையான் என்றதனால் அவற்றுள் ஒன்று இல்வழியும் அரச நீதி செல்லாது என்பது பெற்றாம். 

இதனால் அரசற்கு அங்கமாவன இவை என்பதூஉம் இவை முற்றும் உடைமையே அவன் வெற்றிக்கு ஏது என்பதூஉம்உம் கூறப்பட்டன. 

பரிதியார் : அரசருள் ஏறு அரசர் என்னும் பசுக்களுக்கு ஒரு ரிடபம் எனவும்
கவிராஜபண்டிதர் : அரசருள் ஏறு அரசர்களுக்குள் சிங்கத்தைப்போன்றவன் எனவும் கூறுவர்.

மற்றும் 
பத்திமை சான்ற படையும் பலர்தொகினும் ;
எத்திசையும் அஞ்சா எயிலரணும் வைத்தமைந்த 
எண்ணின் உலவாவிழுநிதியும் இம்மூன்றும் 
மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு 
கோலஞ்சி வாழும் குடியும் குடிதழீஇ 
ஆலம்வீழ் போலும் அமைச்சனும் வேலின் 
கடைமணிபோல் திண்ணியான் காப்பும்இம் மூன்றும் 
படைவேந்தன் பற்றுவிடல் எனத்திரிக்கடுகமும் (100,33)
தாழுஞ்செய லின்றொரு மன்னவன் தாங்க வேண்டும் 
கூழுங்குடியும் முதலாயின கொள்கைத் தேனும் 
சூழும் படைமன்னவன் தோளினைக் காவலின்றி 
வாழும் தகைத்தன்றிந்த வையகம் என்று சொன்னார் எனவும்( பெரியபுராணமும் மூர்த்தி நாயனர் 28) கூறும். 

மற்றொரு குறளான 
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் 
எஞ்சாமை வேந்தற் கியல்பு (382) 
அரசனுக்கு இயல்பாவது, திண்மையும் கொடையும் அறிவும் ஊக்கமும் என்னும் இந்நான்கு குணமும் இடைவிடாது நிற்றல் ஆகும் என்பார் பரிமேலழகர். 

ஊக்கம் என்பது வினை செய்தற்கண் மனவெழுச்சி இவற்றுள் அறிவு ஆறங்கத்திற்கும் உரித்து, ஈகை படைக்கு உரித்து, ஏனைய வினைக்கு உரிய உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும் அவற்றுள் இவை அடங்கின் அரசற்குக்கெடுவன பலவாமாகலின் இவை எப்பொழுதும் தோன்றி நிற்றல் இயல்பாக வேண்டும் என்பார், எஞ்சாமை வேந்தற்கு இயல்பு என்றார் .ஆனால் பரிப்பொருள் வேந்தற்கு இயல்பு இவை நான்கும் இயற்கையாக வேண்டும் என்றது என்கிறார். இவ்விரண்டிற்கும் வேறுபாடு உண்டு. இவற்றுள் பரிப்பொருள் கூறுவது சிறப்பு. 

குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன் 
அடிதழீஇ நிற்கும் உலகு. 
பரிமேலழகர் குடி தழீஅ கோல் ஓச்சும் மாநில மன்னன் அடி தன் குடிகளையும் அணைத்துச் செங்கோலையும் செலுத்தும் பெருநில வேந்தன் அடியைத்  தழீஇ நிற்கும்.  உலகு பொருந்தி விடார் உலகத்தார். 

அணைத்தல், இன்சொல்லுதலும், தளர்ந்துழி வேண்டுவன கொடுத்தலும் முதலாயின. இவ்விரண்டினையும் வழுவாமல் செய்வான் நிலம் முழுதும் ஆளும் ஆகலின் அவனை மாநில மன்னன் என்றும், அவன்மாட்டு யாவரும் நீங்கா அன்பினர் ஆவர் ஆகலின் அடி தழீஇ நிற்கும் உலகு என்றும் கூறினார். 

வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் 
கோல்நோக்கி வாழும் குடி (542) எனும் குறள் 
உலகத்து உயிரெல்லாம் மழை உளதாயின் உளவாகா நிற்குமே எனினும், குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும் என்பார் பரிமேலழகர். 

நோக்கின் வாழ்தல், இன்றியமையாமை வானின் ஆய உணவை வான் என்றும் கோலின் ஆய ஏமத்தைக் கோல் என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவு உளதாயினும் குடிகட்கு அதனால் பயன் இல்லை என்பதாம் என மேலும் உரைக்கிறார். 

காலம் அறிதல் எனும் அதிகாரத்தில் பரிமேலழகர் அதாவது வலியான் மிகுதி உடையானாய்ப் பகைமேல் சேறலுற்ற அரச செலவிற்கு ஏற்ற காலத்தினை அறிதல், அதிகார முறைமையும் இதனானே விளங்கும் என்பார். 

ஒரு மன்னன் தக்ககாலம் அறிந்து வினைசெயல் வேண்டும். இதனை ,
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் 
வேந்தர்க்கு வேண்டும் பொழுது (481) என்பார் வள்ளுவர். 
இதற்குப் பரிமேலழகர் தன்னின் வலிதாய கூறுகையைக் பகற்பொழுதின் கண் வெல்லாநிற்கும், அது பகைவரது இகலை வெல்லக் கருதும் அரசர்க்கு அதற்கு ஏற்ற காலம் இன்றியமையாது எனக் கூறுவர். 

இது எடுத்துக்காட்டு உவமை, காலம் அல்லாவழி வலியால் பயன் இல்லை என்பது விளக்கி நிற்கின்ற இனிக்காலமாவது வெம்மையும் குளிர்ச்சியும் தம்முள் ஒத்து நோய் செய்யாது தண்ணீரும் உணவும் உடைத்தாய்த் தானை வருந்தாது செல்லும் இயல்பினதாம். 

ஆனால், மணக்குடவர் பகல்வெல்லும் கூகையைக் காக்கை இராப்பொழுது வெல்லும் , கூகையைக் காண பகற்பொழுது வெல்லும் எனவும். 
பரிதியார் : பகற்காலம் கூகையைக் காக்கை வெல்லும் இராக்காலம் காக்கையைக் கூகை வெல்லும். அத்தன்மை போலக் காலம் அறிந்து செய்யின் வெல்லலாம் எனவும்.

காளிங்கர் கூகையாகிய புள்ளினை எறியுமிடத்துத் தனக்கு வாய்த்த காலம் பகற்பொழுதிற்கண் சென்று. அடர்த்து வெல்லும் காக்கையானது மற்று அங்ஙனமே வெல்லும் காக்கையை எறியுமிடத்துத் தனக்கு வாய்த்தக் காலமாகிய இருட்பொழுதின் கண் சென்று வெல்லும் கூகையானது எனவும் உரை கூறுவர்.

கடத்திடைக் காக்கை யொன்றே யாயிரம் கோடி கூகை 
இடத்திடை அழுங்கச் சென்றாங் கின்னுயிர் செகுத்த தன்றே (சீவக.1927) 
வேந்தர் அதற்காக்கை கூகையைக் கண் 
டஞ்சினவாம் என அகன்றார். (கம்ப. கார்முகப் .23)

காது கொற்ற நினக்கலாமை பிறர்க்கெவ்வாறு கலக்குமோ
போது பிற்படல் உண்டி தோர்பொருள் அன்றியின்று புணர்த்தியேல் 
யாதுனக்கிய லாத தெந்தை வருந்துதல் இன்ன இயம்பினான் 
(கம்ப.கார்காலப். 69)
எனும் பிற சான்றுகளையும் ஒப்பு கொள்ளலாம். 

ஒரு மன்னன் பகைமையைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்னும் பொருளில் வள்ளுவர். 
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து 
மாணாத செய்வான் பகை (867) எனக் கூறுவார். இதற்குப் 
பரிமேலழகர் வினையைத் தொடங்கியிருந்து அதற்கு ஏலாதன செய்வான் பகைமையை, சில பொருள் அழியக் கொடுத்தாயினும் கோடல் ஒரு தலையாக வேண்டும் என்பார் . மேலும், ஏலாதன மெலியனாய் வைத்துத் துணிதலும், வலியனாய் வைத்துத் தணிதலும், முதலாயின அப்பொழுது அதனால் சில பொருள் அழியினும் பின் பொருள் எய்தற்கு ஐயம் இன்மையின, கொளல் வேண்டும் என்றார். 
ஆனால் மணக்குடவர் அடுத்திருந்தும், பகையை உற்றிருந்தும் எனவும் 
காளிங்கர் கொடுத்தும் தமக்குச் சிறந்தது யாதானும் கொடுத்தும் எனவும் உரை வகுக்கின்றனர் இக்குறளைப் போன்றே ,

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் 
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு (794) எனும் குறளுக்குப் பரிமேலழகர் உயர்ந்த குடியின்கண் பிறந்து தன்மாட்டு உலகர் பழிக்கு அஞ்சுவானை, சில கொடுத்தாயினும் நட்புக் கோடல் சிறந்தது என்பார்.

குடிப்பிறப்பால் தான் பிழை செய்யாமையும், பழிக்கு அஞ்சலால் பிழைத்தன பொறுத்தலும் பெற்றாம் . இவை இரண்டும் உடையானைப் பெறுதல் அருமையின் அவன் நட்பை விலைகொடுத்தும் கொள்க என்பதாம் என உரை கூறுகிறார். மேலும்,

பரிதியார் : கொடுத்தும் அவனுக்கு வேண்டுவென கொடுத்தும் எனவும் 
காளிங்கர் : கொடுத்தும் சிறந்தன கொடுத்தும் எனவும் உரை வகுக்கின்றனர். 
இவற்றின் பொருத்தம் இனிதுணரத் காணலாம். இவை ஒரு மன்னனுக்கான சிறப்பாகவும் கொள்ளப் பெறுகிறது. 

மாறாக மன்னன் மக்களுக்கு முறை செய்யாமல் நாட்டை ஆள்வான் எனின் அவனுக்குக் கேடுநிகழும் என்பதனை வள்ளுவர் பல குறட்பாக்களின் வழி  எடுத்துரைக்கின்றனர் எனும் அதிகாரத்தில் 

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் 
தண்பதத்தான தானே கெடும் (548) எனும் குறள்வழி இதனைக் கூறுவர். இதற்குப் பரிமேலழகர் மன்னவன் முறை வேண்டினார்க்கு எளிய செவ்வியை உடையனவாய் அவர் சொல்லிய வற்றை நூலோர் பலரோடும் ஆராய்ந்த நின்ற உண்மைக்கு ஒப்ப முறை செய்யாத அரசன், தாழ்ந்த பதத்திலே நின்று தானே கெடும் என்று உரை வகுப்பார். 

எண்பதத்தான் என்னும் முற்றுவினை யெச்சமும், ஓரா என்னும் வினையெச்சமும் செய்யா என்னும் பெயரெச்ச எதிர்மறையுள் செய்தல்வினை கொண்டன. தாழந்த பதம், பாவமும் பழியும் எய்தி நிற்கும் நிலை அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆகலின் பகைவர் இன்றியும் கெடும் என்றார். 

இதனான் முறை செலுத்தாதானது கேடு கூறப்பட்டது. இதன் பொருத்தம் அறிந்து உணரலாம். 
இவ்வாறாக மன்னன் பெருமை கூறிவந்த வள்ளுவர் எனும் அதிகாரத்துள், மக்களின் துயர் போக்காத இறைவனையும் சாடுகின்றார். 

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து 
கெடுக உலகியற்றி யான் ( 1062) 
பரிமேலழகர் இவ்வுலகத்தைப் படைத்தவன் இதன்கண் வாழ்வார்க்கு முயன்று உயிர்வாழ்தலை அன்றி இரந்தும் உயிர்வாழ்தலை வேண்டி விதித்தானாயின. அக்கொடியோன் தானும் அவரைப் போன்று எங்கும் அமைந்து கெடுவானாக. 

மக்கள்  உயிர்க்கெல்லாம் வாழ்நாளும், அதற்கு வேண்டுவதாய் உண்டியும் அதற்கு ஏதுவாய் செய்தொழிலும், பழவினைவயத்தான் கருவொடு கலந்த அன்றே அவன் கற்பிக்கும் அன்றே? அவற்றுள் சில உயிர்க்கு இரத்தலையும் ஒரு செய்தொழிலாகக் கற்பித்தானாயின் அத் தீவினையால் தானும் அத் துன்பம் உறல் வேண்டும் என்பதாம். 

இதற்குப் பின்வரும் சங்கப்பாடல்கள் சான்றாக உள்ளன. 
ஐதே கம்மஇவ் வுலகுபடைத் தோனே (நற். 240:1) 
படைத்தோன் மன்றஅப் பண்பிலாளன் (புறநா. 194:5) 
இக்குறள் ஒரு முனிவரின் சாபமாக இடம் பெற்றுள்ளமை அறியலாம். 

வினை :
வள்ளுவர் ஓர் அரசன் மேற்கொள்ள வேண்டிய வினைகளைப் பலவாறு எடுத்துரைக்கிறார். ,

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க 
செய்யாமை யானும் கெடும் 
அரசன் தன் வினைகளுள் செய்யத் தக்கன அல்லவற்றைச் செய்தால் கெடும் இனி அதனானே அன்றிச் செய்யத் தக்கனவற்றைச் செய்யாமை தன்னானும் கெடும். 

செய்யதக்கன அல்ல ஆவன பெரிய முயற்சியினவும், செய்தால் பயன் இல்லனவும், அது சிறிதாயினவும், ஐயமாயினவும், பின் துயர்விளைப்பனவும் என இவை. செய்யத் தக்கன ஆவன அவற்றின் மறுதலை ஆயின. இச் செய்தல் செய்யாமைகளான அறிவு, ஆண்மை, பெருமை என்னும் மூவகை ஆற்றலுள் பொருள், படை என இருவகைத்தாய பெருமை சுருங்கிப் பகைவர்க்கு எளியனாம் ஆகலான், இரண்டும் கேட்டிற்கு ஏது ஆயின. 

இதனான், செய்வன செய்து ஒழிவன ஒழிக என இரு வகையனவும் உடன் கூறப்பட்டன  எனப் பரிமேலழகர் உரை கூறுவார். இன்றைய நிலையிலும் வைத்து எண்ணத் தருவனவாய் இக்குறளும் அதற்கான உரை விளக்கமும் அமைந்திருப்பது சிறப்பாம். இவை ஒரு மன்னனுக்கான வினையாக மட்டுமின்றி, மக்களுக்குமானதாகப் பொருத்தமுடையதாக உள்ளது. 

மேலும்  
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை (672) என்கிறார் அதாவது நீட்டிச் செய்யும் பகுதியவாய வினைகளுள் நீட்டிக்க நீட்டியா தொழிக என்பதாம். 

இருவகை வினைகளும் வலியானும் காலத்தானும் அறியப்படும் மாறிச் செய்யின் அவை வாயா என்பது கருத்து. மேல் துங்காமை என்றார். ஈண்டு அதனைப் பகுத்துக் கூறினார் என்பார் பரிமேலழகர். 

வினைக்குத் தாயாய் இருப்பவை சில. இதனாலே மன்னரின் சிறப்புக்கள் மட்டுமல்ல. மக்களின் வளர்ச்சியும் தடைபெற்றுள்ளமையை உணரலாம். வள்ளுவர்

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் 
கெடுநீரார் காமக் கலன் (605) என்கிறார். 
மடியும் விரைந்து செய்வதனை நீட்டித்து செய்யும் இயல்பும் மறப்பும் துயிலும் ஆகிய இந்நான்கும் இறக்கும் இயல்பினை உடையார் விரும்பி ஏறும் மரக்கலம்  என்பார். 

முன் நிற்கப்பாலதாய மடி செய்யுள் நோக்கி இடைநின்றது. நெடுமையாகிய காலப்பண்பு அதாவது கண் நிகழ்வதாய செயல்மேல் நின்றது. காலநீட்டத்தையுடைய செயல்முதல் மூன்றும் தாமத குணத்தின் தோன்றி உடன் நிகழ்வன ஆகலின் மடியோடு ஒருங்கு எண்ணப்பட்டன. இறக்கும் இயல்பு. நாள் உலத்தல் இவை துன்புறும் நீரார்க்கு இன்புறுத்துவபோன்று காட்டி, அவர் விரும்பிக் கொண்டவழித் துன்பத்திடை வீழ்த்தலின், நாள் உலந்தார்க்கு ஆக்கம் பயப்பது போன்று காட்டி அவர் விரும்பி ஏறியவழிக் கடலிடை வீழ்க்கும் கலத்தினை ஒக்கும் என்னும் உவமைக் குறிப்புக் காமக் கலன் என்னும் சொல்லால் பெறப்பட்டது. இதற்கு விரும்பிப் பூணும் ஆபரணம் என்று உரைப்பாரும் உளர் எனும் உரைச் சிறப்பு அறிக. 
வள்ளுவர் முயற்சி திருவினையாக்கும் என்றார் .முயற்றின்மை இன்மை புகுத்திவிடும் என்றார். இதனை 
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை 
வாள்ஆண்மை போலக் கெடும் (614) எனும் குறள் 
முயற்சி இல்லாதவன் உபகாரியாம் தன்மை, படை கண்டால் அஞ்சும் பேடி அதனிடைத்தன் கையில் வாளை ஆளுதல் தன்மை போல இல்லையாம் என்கிறது.

ஆள் என்பது முதனிலைத் தொழிற் பெயர் பேடி வாளைப் பணி கோடல் கருத்து உடையன் ஆயினும் அது தன் அச்சத்தால் முடியாதவாறு போல முயற்சி இல்லாதான் பலர்க்கும் உபகரித்தல் கருத்து உடையன் ஆயினும் அது தன் வறுமையால் முடியாது என்பதாம். வாளாண்மை என்பதற்கு வாளார் செய்யும் ஆண்மை என்று உரைப்பாரும் உளர். 

இதனான் அஃது இல்லாதானது குற்றம் கூறப்பட்டது என்பார் பரிமேலழகர். ஆனால், காளிங்கர் பேடிகை வாளாண்மை போல கெடும் உறையகத்து இருந்த வாளாண்மை போலக் கெடும் பேடிகை என்பது வாளினது உறை எனப் பிறிதொரு விளக்கம் கூறுவார்.

இவை மன்னாளும் மன்னனுக்கு மக்கள் நலம் நோக்கி வள்ளுவர் எடுத்துரைத்த கருத்துக்கள் ஆகும். 

அறம் 
மனித வாழ்வின் அடிப்படை அறம். அறம் பொருள், இன்பம், வீடுபேறு எனும் தொடர் முதன்மையாக அறத்தை உணர்த்தும் அறத்தின் வழியேதான் பிற இன்பங்களை வாழ்வில் பெறமுடியும் அவ்வாறான அறம் பொதிந்த கருவூலம் போலத் திருக்குறள் விளங்குகிறது. 
நாட்டை ஆளும் மன்னனுக்கு அறம் வழிப்படும் கண்ணோ ட்டம் அவசியம் அதனால்தான்   
அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின் 
திறம்தெரிந்து தேறப்படும் (501) எனும் குறள்வழி அரசனானல் தெளியப்படுவான் ஒருவன், அறமும் பொருளும் இன்பமும் உயிர்ப் பொருட்டான் வரும் அச்சமும் என்னும், உபதை நான்கின் திறத்தான் மன இயல்பு ஆராய்ந்தால் பின்பு தெளியப்படும் என்கிறார். 

அவற்றுள் அற உபதையாவது புரோகிதரையும் அறவோரையும் விட்டு அவரால் இவ்வரசன் அறவோன் அன்மையின் இவனைப் போக்கி அறனும் உரிமையும் உடையான ஒருவனை வைத்து எண்ணினம், இது தான் யாவர்க்கும் இயைந்தது நின் கருத்து என்னை? எனச் சூளுறவோடு சொல்லுவித்து பொருள் உபதையாவது, சேனைத் தலைவனையும் அவனோடு இயைந்தாரையும் விட்டு அவருக்கு இவ்வரசன் இவறன்மாலையன் ஆகலின் இவனைப் போக்கிக் கொடையும் உரிமையும் உடைய ஒருவனை வைத்தற்கு எண்ணினம். இதுதான் யாவர்க்கும் இயைந்தது. நின் கருத்து என்னை? சூளுறவோடு சொல்லுவித்தல். இன்ப உபதையவது தொன்றுதொட்டு உரிமையொடு பயின்றான் தவமுது மகளை விட்டு அவளால் உரிமையுள் இன்னாள் நின்னைக் கண்டு வருத்தமுற்றுக் கூட்டு வேண்டும் என்று என்னை விடுத்தாள் அவளைக் கூடுவையாயின் நினக்குப் பேரின்பமே யன்றிப் பொருளும் கைகூடும் எனச் சூளுறவோடு சொல்லுவித்தல் அச்ச உபதையாவது ஒரு நிமித்து மேலிட்டு ஓரமைச்சனால் ஏனையோரை அவன் இல்லின்கண் அழைப்பித்து இவர் அறை போட்டு எண்ணற்குக் குழீயினார் என்று தான் காவல் செய்து ஒருவனால் இவ்வரசன் நம்மைக் கொல்ல சூழ்கின்றமையின் அதனை நாம் முற்படச் செய்து நமக்கு இனிய அரசன் ஒருவனை வைத்தல் ஈண்டு யாவர்க்கும் இயைந்தது. நின் கருத்து என்னை? எனச் சூளுறவோடு சொல்லுவித்தல் இந்நான்கின் திரிபிலனாய வழி எதிர்காலத்தும் திரிபிலன் எனக் கருத்தளவையால் தெளியப்படும் என்பதாம். இவ்நூற் பொருண்மையை உட்கொண்டு இவர் ஓதியது அறியறாது பிறரெல்லாம் இதனை உயிரெச்சம் என பாடம் திரித்துத் தத்தமக்குத் தோன்றியவாறே உரைத்தார். 
பரிதியார் : தன்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்னும் நாலு காரியமும் விசாரித்து யாதென காரியமும் செய்வான் என்கிறார். 

காளிங்கர் : மறைமுதலாகிய நூல் யாவற்றிலும் சொன்ன அறம் பொருள் இன்பம் வீடு என வசூல் நால்வகை யாகலின் அவற்றுள் அறமானது பாவம் அனைத்தையும் பற்று அறுப்பது என்றும், இரு இன்பம் எய்துவிப்பது என்றும் அவற்றுள் பொருளானது பலவகைத் தொழிலினும் பொருள் வருமே தமக்கு அடுத்த தொழிலினாகிய பொருளே குற்றமற்ற நற்பொருள் என்றும், மற்று இனி இன்பமாக கற்பின் திருந்திய பொற்புடையாட்டி இல்லறத் துணையும் இயல்புடை மக்களும் இரு தலையா இயைந்த இன்பம் என்றும், மற்றும் இவற்றுள் உயர்ந்த வீடாவது பேதைமையுற்ற பிறப்பு இறப்பு என வஞ்சப் பெருவலைப்பட்டு மயங்காது நிலைபெற நிற்கும் வீடு இது என்றும் இங்ஙனம் இவை நான்கு திறம் தெரிந்து பின் தமக்கு அடுத்தது ஒன்றினைத் தலைத்தேறித் தெளிய அடுக்கும் அரசர்க்கு என்று பலரும் உரை வகுத்துள்ளனர். 

மற்றொரு  குறளில் 
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து 
தீதின்றி வந்த பொருள் ( 754) என்கிறார். 
அதாவது செய்யும் திறத்தினை அறிந்து கொடுங்கோன்மை இலனாக உளதாய பொருள் அவனுக்கு அறம் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும். 

செய்யும் திறம் தான் பொருள் செய்தற்குரிய நெறி இலனாக என்பது இன்றியெனத் திரிந்து செங்கோலனென்று புகழப்படுவதாலும் கடவுட் பூசை தானங்களால் பயன் எய்தலானும் அறம் என்றும், நெடுங்காலம் நின்று துய்க்கப்படுவதான் இன்பமும் ஈனும் என்றும் கூறினார். அறம் அத்திறத்தான் ஈட்டுக என்பதாம்.
மணக்குடவர் : தீது இன்றி வந்த பொருள் நியாயமாகத் தேடிய பொருள்  எனவும்
கவிராஜ பண்டிதர் : திறன் அறிந்து தீது இன்றி வந்த பொருள் செய்கிற காரியத்தைப் பொருள் இல்லாமல் நல்ல வழியிலே செய்து தேடின பொருள் எனவும் கூறுவர். 

ஒப்புமை 
பொருள் அறனும் இன்பமும் ஈனுதல் 
அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் 
ஆற்றம் பெருமநின் செல்வம் (புறநா. 28:15-6)
இது ஒரு மன்னன் அறம் செய்யும் வழிமுறையை எடுத்துரைப்பதாக இருப்பதனைக் காணலாம். 

அறத்தின் வழியே ஈட்டிய பொருள்தான் மகிழ்ச்சியை அளிக்கும் அறத்தான் வருவதே இன்பம் என்ற வள்ளுவர் அந்த முயற்சியின் வழி வந்த பொருளால் உணவாகும் போது மிக்க இனிதாக உளதாம். இதனை எனும் அதிகாரத்தின் வழி 

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த 
துண்ணலின் ஊங்கினிய தில் (1005) என எடுத்துரைக்கிறது. நெறியாய முயற்சி கொடுவந்து தந்தது தெளிந்த நீர்போலும் அடுபுற்கையே ஆயினும், அதனை உண்டற்கு மேல் இனியது இல்லை. 

தாள் தந்த கூழ் செறிவு இன்றித் தெண்ணீர் போன்றது ஆயினும் இழிவாய இரவான் வந்ததன்றித் தம் உடைமை ஆகலின், அமிழ்தத்தோடு ஒக்கும் என்பதாகும். இதனான் நெறியினான் ஆயது சிறிதேனும் அது செய்யும் இன்பம் பெரிது என்பது கூறப்பட்டது என்பார் பரிமேலழகர். 

மணக்குடவர் : தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் மோரிலும் காடியிலும் அடப்பெறாது தெளிந்த நீரினாலே அடப்பட்ட புற்கையாயினும். 
பரிப்பெருமாள் : இரந்துகொண்டு அக்காரம் பாலோடு அயிறலின் புற்கை அயிறல் இனிது என்பது 
கவிராஜ பண்டிதர் : புற்கை புல்லரிசிக் கூழ் என்றெல்லாம் கூறுவர்.

பெருமுத் தலையர் பெரிதுவந் தீயும் 
கருனைச்சோறார்வர் கயவர் கருனையைப் 
பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை 
நீரும் அமிழ்தாய் விடும் (நாலடி. 200) 
எனவரும் அடிகள் சிறப்புடையதாம். 

உலகில் நடைபெறும் தொழில்களிலெல்லாம் உலகை உய்விக்கும் வேளாண் தொழில் சிறப்புடையதாகும். அதனாலேயே வள்ளுவர் உழவு எனும் அதிகாரம் படைத்துள்ளார். எல்லா தொழில்களுக்கும் தலையாய தொழிலாக உழ்வினைக் கொண்டாட முடியும் ஆதலின் 

சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால் 
உழந்தும் உழவே தலை ( 1031) என்றார். 
பரிமேலழகர் உழுதலான் வரும் மெய்வருத்தம் நோக்கிப் பிற தொழில்களைச் செய்து திரிந்தும் முடிவில் ஏருடையார் வழிவது ஆயிற்று உலகம் ஆகலான் எல்லா வருத்தம் உற்றும் தலையாய தொழில் உழவே என்ற உரை கூறுவார். 

பிற தொழில்களால் பொருள் எய்திய வழியும் உணவின்பெர்ருட்டு உழுவார்கண் செல்லவேண்டுதலின் சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்றும் வருத்தம் இலவேனும் பிற தொழில்கள் கடை என்பது போதர உழந்தும் உழவே தலை என்றும் கூறினார். இதனான் உழவினது சிறப்புக் கூறப்பட்டது.

பரிதியார் : பூமியைப் பிரதட்சிணம் பண்ணின தர்மமும், உழவு செய்து கொடுத்த தர்மத்திற்கு நிகர் இல்லை எனவும். 
காளிங்கர் : கடல் ஓடியும் மலை ஏறியும் காடு மண்டியும் நாடு பரந்தும் ஓடித் திரிதலே அன்றியும், உண்பான் பொருட்டு இதனைப் பிற பிற முயன்று அலம் வந்தும் அதனால் ஒரு பயனும் இல்லை. ஆதலால் ஏர் கொண்டு வாழ்வார் தமது வழிச்சேறலே பயன் உள்ள வாழ்வாம் மற்று அது எங்ஙனம் எனின், எழுகைப் பொருட்டாக உழு கருவிக்குக் காடு புக்கு மரம் தடிதலும் கனவிய கொழுவும் அதற்கு ஏற்ற பல கருவியும் வன்புலம் மென்புல வடிவத்து இயற்றலும், படைக்கால் அமைத்தலும் முதலிய பலவகைப் பயிர்வளம் முற்றிய அவை அனைத்தும் உழந்தும் உழவு இயற்றலே தலைப்பாடு ஆவது எனவும் சிறப்பி;கின்றார். 

கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக.
பரிமேலழகர் : கற்பவை கசடு அற கற்க ஒருவன் கற்கப்படும் நூல்களைப் பழுதறக் கற்க கற்றபின் அதற்கு தக நிற்க அங்ஙனம் கற்றால் அக்கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க. 

கற்பவை என்றதனான் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப்பிற பொருள் உணர்த்துவன சின்னாட் பல் பணிச் சிற்றறிவினர்க்கு ஆகா என்பது பெற்றாம். கசடறக் கற்றலாவது விபரீத ஐயங்களை நீக்கி மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல் நிற்றலாவது இல்வாழ்வு கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத் தருமமும் தக்கார்க்கே செய் தலினும் துறந்துழித் தவத்தான் மெய்யுணர்ந்து அவா அறத்தலினும் வழுவாமை. 

சிறப்புடை மகற்காயின் கற்றல் வேண்டும் என்பதூஉம் அவனால் கற்கப்படும் நூல்களும் அவற்றைக் கற்குமாறும் கற்றதனாற் பயனும் இதனால் கூறப்பட்டன. 

மற்றும்
எப்பிறப் பாயினும் ஏமாப் பொருவதற்கு
மக்கட் பிறப்பில் பிறிதில்லை - அப்பிறப்பில் 
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண் 
நிற்றலும் கூடப் பெறின் (அறநெறி. 141) எனக்கூறக் காணலாம்.

குறிப்பிற் குறிப்புணரா ஆயின் உறுப்பினுள் 
என்ன பயத்தவோ கண். 
பரிமேலழகர் : குறிப்பின் குறிப்பு உணரா ஆயின் குறித்தது காணவல்ல தம் காட்சியால் பிறர் குறிப்பினை உணரமாட்டா ஆயின், உறுப்பினுள் கண் என்ன பயத்தவோ ஒருவன் உறுப்புக்களுள் சிறந்த கண்கள் வேறு என்ன பயனைச் செய்வன?. 

முதற்கண் குறிப்பு, ஆகுபெயர், குறிப்பதற்கண் துணையாதல் சிறப்புப் பற்றி உயிரது உணர்வு கண்மேல் ஏற்றப்பட்டது. அக் கண்களால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் குறிப்பு அறியாரது இழிபு கூறப்பட்டது. 

மணக்குடவர் : குறிப்பின் குறிப்பு உணரா ஆயின் ஒருவன் முகக் குறிப்பினானே அவன் மனக்குறிப்பை அறியமாட்டா ஆயின்.
கண் குறிப்புணர்தல் 
கணையினும் கூரியவாம் கண் (பழமொழி - 174) 

செவியிற் சுவைஉணரா வாய் உணர்வின் மாக்கள் 
அவியினும் வாழினும் என். 
பரிமேலழகர் : செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் செவியான் நுகரப்படும். சுவைகளை உணராத வாய் உணர்வினையுடைய மாந்தர், அவியினும் வாழினும் என் சாவினும் வாழினும் உலகிற்கு வருவது என்னை?. 

செவியான் நுகரப்படும் சுவைகளாவன சொற்சுவையும், பொருட்சுவையும் அவற்றுள் சொற்சுவை குணம் அலங்காரம் என இருவகைத்து. பொருட்சுவை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என ஒன்பது வகைத்து அவையெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். வாயுணர்வு என்பது இடைப்பதங்கள் தொக்கு நின்ற மூன்றாம் வேற்றுமைத் தொகை. அது வாயான் நுகரப்படும் சுவைகளை உணரும் என விரியும். அவை கைப்பு, காழ்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என ஆறாம் செத்தால் இழப்பதும் வாழ்ந்தால் பெறுவதும் இன்மையின் இரண்டும் ஒக்கும் என்பதாம். வாயுணவின் என்று பாடம் ஓதுவாரும் உளர். 

சொல்வன்மை 
பரிமேலழகர் : அஃதாவது, தான் கருதிய வினை முடியுதமாற்றால் அமைச்சியல் நடத்தற்கு ஏதுவாய சொற்களைச் சொல்ல வல்லன் ஆதல். மேல் ஒரு தலையாச் சொல்லலும் வல்லது என்றதனையே சிறப்புப் பற்றி விரித்து உரைக்கின்றமையின். இஃது அமைச்சின்பின் வைக்கப்பட்டது. 

நாநலம் என்னும் நலன்உடைமை அந்நலம் 
யாநலத் துள்ளதூஉம் அன்று 
பரிமேலழகர் : நா நலம் என்னும் நலன் உடைமை அமைச்சர்க்கு இன்றிமையாக் குணமாவது சான்றோரான் நாநலம் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலத்தினை உடையர் ஆதல். அந் நலம் யா நலத்து உள்ளதூஉம் அன்று அந் நலம் பிறர்க்கும் பிற நலம் எல்லாவற்றுள்ளும் அடங்குவ தன்றி மிக்கதாகலான். 

நாவால் உளதாய நலம் என விரியும். இந்நலம் உலகத்தைத் தம் வயத்து ஆக்கும் அமைச்சர்க்கு வேறாக வேண்டும் என்னும் நீதி நூல் வழக்குப் பற்றி நாநலம் என்னும் நலன் என்றும். பிறர்க்கும் இது போல் சிறந்தது பிறிது இன்மையான் அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று என்றும் கூறினார். பிரித்தல் பொருத்தல் முதலிய தொழில் இல்லாதார்க்கும் இஃது இன்றியமையாதாய பின் அத் தொழிலார்க்கும் கூற வேண்டுமோ என்பது கருத்து. 
பரிப்பொருள்:  இஃது எல்லா அழகினும் மிகுந்த அழகு என்றமையான் இன்பமும் பயக்கும் என்றது. சொல்வலை வேட்டுவன் என்றாரும் உளர். 

சொல்நலம் : 
மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்
உகிர்வனப்பும் காதின் வனப்பும் செயிர்தீர்ந்த 
பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த 
சொல்லின் வனப்பே வனப்பு (சிறுபஞ்ச. 36) 

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க 
சொல்லேர் உழவர் பகை. 
பரிமேலழகர் வில் ஏர் உழவர் பகை கொளினும் ஒருவன் வில்லை ஏராக உடைய உழவரோடு பகைகொண்டானாயினும், சொல் ஏர் உழவர் பகை கொள்ளற்க சொல்லை ஏராக உடைய உழவரோடு பகை கொள்ளா தொழிக. 

சொல் : ஆகுபெயரான் நீதி நூல்மேல் நின்றது. வீரம் சூழ்ச்சி என்னும் ஆற்றல்களுள் வீரமே உடையாரோடு பகைகொண்டால் கேடுவருதல் ஒருதலை யன்று வந்ததாயினும் தனக்கே யாம் ஏனைச் சூழ்ச்சி உடையாரோடாயின், தன் வழியின் உள்ளார்க்கும் தப்பாது வருதலின் அது கொள்ளினும் இது கொள்ளற்க என்றார். உம்மையான் அதுவும் ஆகாமை பெறுதும். இரண்டும் உடையாரோடு கொள்ளலாகாமை சொல்ல வேண்டாவாயிற்று. உருவக விசேடம். 

மக்குணடவர் : இஃது அரசரோடு பகை கொள்ளினும் அமைச்சரோடு பகை கொள்ளலாகாது என்றது.
காளிங்கர் : சொல்லேருழவர் என்பது கற்றுணர்ந்து சான்றோர் என்றது

வில்லேர் உழவர் : 
வில்லே ருழவர் வெம்முனைச் சீறார் 
வில்லுழு துண்மார் 
வில்லேர் வாழ்க்கை
வில்லேர் உழவின்நின் நல்லிசை (புறநா.170,4,331,2,371:13)

வௌ;ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்க்கும் 
உள்ளத் தனைய துயர்வு 
பரிமேலழகர்:வெள்ளத்து அனைய மலர் நீட்டம் நின்ற நீரின் அளவினவாம். நீண்ட  தாளினது நீளங்கள் மாந்தர்க்கும் தம் உள்ளத்து அனையது உயர்வு அதுபோல் மக்கள் அளவினதாம் அவர் உயர்ச்சி. 

மலர் : ஆகுபெயர் நீர்மிக்க துணையும் மலர்த்தாள் நீளும் என்பதுபட, வெள்ளத்தனை இவ்வுவமை ஆற்றலான் ஊக்கம் மிக்க துணையும் மக்கள் உயர்வர் என்பது பெற்றப்பட்டது பொருள் படைகளான் மிகுதல். 

மணக்குடவர் : நீட்டம் வளர்ச்சி 
பரிதியார் : உள்ளம் கல்வி 
காளிங்கர் : உள்ளம் நெஞ்சு ஒருப்பாடு 

ஆண்மை என்பது ஆள் + மை என்பதன் புணர்ச்சியாகும் ஆளுதல் என்பது ஆண்மக்கட்கு உரியதாக வைத்து எண்ணப்படுகிறது. வள்ளுவர் பல அதிகாரங்கள் வழி இதனை எடுத்துரைக்கக் காணலாம். எனும் அதிகாரத்துள் 

நல்லாண்மை என்ப தொருவதற்கத் தான்பிறந்த 
இல்லாண்மை ஆக்கிக் கொளல் (1026) எனும் குறளில் 
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று உயர்த்துச் சொல்லப்படுவது. தான் பிறந்த குடியினை ஆளும் தன்மையைத் தனக்கு உளதாக்கிக் கோடல் என்று கூறுவார். 

போர்த் தொழிலின் நீக்குதற்கு நல்லாண்மை என விசேடித்தார் குடியினை ஆளும் தன்மை குடியின் உள்ளாரை உயரச் செய்து தன்வழிப்படுத்தல் அதனைச் செய்து கோடல் நல்லாண்மை யாமாறு வருகின்ற பாட்டால் பெறப்படும். என்பார் பரிமேலழகர். 

ஆனால் மணக்குடவர் : ஆளுதல் உடைமை குடியோம்புதலை எப்பொழுதும் சிந்தித்தல் என்கிறார். இவ்வுரையின் இன்றைய காலப் பொருத்தப்பாட்டினை அறிதல் சிறப்பாகும். மாறாக, வினைபுரி ஆடவர் தம் நிலை மறந்து, இலத்தில் வீனே கழிதலும் உண்டு, இதனை, எனும் அதிகாரத்தில் 

பெண்ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் நானுடைப் 
பெண்ணே பெருமை உடைத்து (907) என்பார் வள்ளுவர். 
நான் இன்றித் தன் இல்ல ஏசல்தொழிலைச் செய்து திரிகின்றவனது ஆண் தன்மையின் நாணினை உடைய அவள் பெண் தன்மையே மேம்பாடு உடைத்து என்கிறார். 

நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து அதனால் அவ்வாண்மை படைப்பு ஆண்மகற்கு உள் அஞ்சும் நாணத்தையுடைய நன்னெறிப் பெண்ணே அவர்க்கு மிக்க பெருமை கொடுக்கும் என்று காளிங்கராயர் கூறுவர். இக்குறளின் பொருள் சற்று சிந்திக்கத் தக்கதாகும். ஆடவர் இல்லில் தம் மனையாளை அடக்கி ஆள நினைப்பதன் காரணம், மனப் பொருத்தப்பாடின்மையாகும்.  

இதனை உணர்த்த வந்த வள்ளுவர் .. எனும் அதிகாரத்துள் 
உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள் 
பாம்போ டுடன் உறைந் தற்று (890) எனும் குறள்வழி 
மனப் பொருத்தம் இல்லாதாரோடு கூட ஒருவன் வாழும் வாழ்க்கை, ஒரு குடிலுள்ளே பாம்போடு கூட உறைந்தாற்போலும் என்கிறார். 

குடங்கம் என்னும் வடசொல் திரிந்து நின்றது. இடச் சிறுமையாலும் பயிற்சியானும் பாம்பால், கோடபடல் ஒருதலையாம். ஆகவே, அவ்வுவமையால் அவன் உயிர்க்கு இறுதி வருதல் ஒருதலை என்பது பெற்றாம். இதனான் கண்ணோடாதவரைக் கடிகவென்பது கூறப்பட்டது என்பார் பரிமேலழகர்.

பரிதியார்: ஒரு குடத்திலே பாம்பும் கருடனும் இருப்பதற்கு ஒக்கும் எனவும் 
காளிங்கர் : குடங்கர் பெரும்பேழை எனவும் உரைவகுக்கின்றனர். இப்பொருளின் தன்மை நயமுடைத்தாம். இத்தன்மையோரான ஆடவரின் வினைக்கான காரணம் அவர்தம் செயல்களே ஆகும். அவற்றுள் ஒன்று சிற்றினம் சேர்தல் ஆகும்.

சிற்றினம் சேராமை என்பதற்கு விளக்கமாகப் பரிமேலழகர் பின்வருமாறு கூறுகிறார். அஃதாவது சிறிய இனத்தைப் பொருந்தாமை சிறிய இனமாவது நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்என் போரும் விடரும் தூர்த்தரும் நடரும் உள்ளிட்ட குழு. அறிவைத்திரிந்து இருமையும் கெடுக்கும் இயல்பிற்றாய அதனைப் பொருந்தின் பெரியாரைத் துணைக்கோடல் பயன் இன்று என்பது உணர்த்தற்கு இஃது அதன்பின வைக்கப்பட்டது இதற்குப் பரிதியார் சிற்றினம் சேராமையாவது அறிவுக்கீடனும் சேராமை என்பார். 

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் 
சுற்றமாச் சூழ்ந்து விடும் (45) 
பெரியோர் இயல்பு சிறிய இனத்தை அஞ்சா நிற்கும் ஏனைச் சிறியோர் இயல்பு அது சேர்ந்தபொழுதே அதனைத் தனக்குச் சுற்றமாக எண்ணித் துணியும். 

தத்தம் அறிவு திரியுமாறும் அதனால் தமக்கு வரும் துன்பமும் நோக்கலின் அறிவுடையார் அஞ்சுவார் என்றும் அறிவு ஒற்றுமையான் பிறிது நோக்காமையின் அறிவு இலாதார் தமக்குச் சுற்றமாகத் துணிவர் என்றும் கூறினார். பொருளின் தொழில்கள் பண்பின்மேல் நின்றன. இதனான் சிறிய இனம் பெரியோர்க்கு ஆகாது என்பது கூறப்பட்டது. 

விடரும், தூர்த்தரும் நடரும் என்பதன் பொருள் விடர் - தீய நனயையுடைய காமுகர் தூர்த்தர் பரத்தையை நுகரும் காமுகர் நடர் கூத்தாடுவார் நகைவகையராகிய நடபினராவார் விடரும் தூர்த்தரும் வேழம்பரும் போன்று பலவகையில் நகுவித்துத் தாம் பயன்கொண்டு ஒழிவார் விடரும் தூர்த்தரும் விடடேற் றாளரும் மெலித்துகு நெஞ்சின் விடரும் தூர்த்தரும் (மணி 14:26. 15:60) என்பதாகும். 

இதைப் போலவே கள் உண்ணாமை எனும் அதிகாரத்தில் வள்ளுவர் இனி ஒழுக்கமும் உணர்வும் அழித்தற்கண் அவ்வரைவில் மகளிரோடு ஒப்பதாய கள்ளினை  உண்ணாமையது சிறப்பு எதிர்மறை முகத்தால் கூறுகின்றார். 
உட்கப் படாஅர் ஒளிஇழப்பார் எஞ்ஞான்றம் 
கட்காதல் கொண்டொழுகு வார் ( 921) எனும் குறளில் கள்ளின்மேல் காதல் செய்து ஒழுகும் அரசர், எஞ்ஞான்றும் பகைவரான் அஞ்சப்படார் அதுவேயன்றி முன் எய்தி நின்ற ஒளியினையும் இழப்பார் என்கிறார். 

அறிவின்மையால் பொருள் படை முதலியவற்றால் பெரியராய காலத்தும் பகைவர் காலத்தும் பகைவர் அஞ்சார் தம் முன்னோரான் எய்திநின்ற ஒளியினையும் இகழற்பாட்டான் இழப்பார் என்பதாம். இவை இரண்டாலும் அரசு இனிது செல்லாது என்பது இதனால் கூறப்பட்டது. 

ஆனால் மணக்குடவர் உட்கப் படாஅர் பிறரால் மதிக்கவும் படார் எனவும். 
பரிதியார் : உட்கப் படாஅர் நல்லோரால் நினைக்கப்படார் ஒளி கீர்த்தி எனவும் 
காளிங்கர் : உட்கப் படாஅர் பெரியேர் என்று மதிக்கப்படார் எனவும். 
கவிராஜ பண்டிதர் : உடகப் படாஅர் தமக்கு வருகிற நன்மை தீகைமளை அறியார் எனவும் கூறுவர். 

கள்காதல் கொண்டொழுகுவார் ஒளி இழப்பர் என்பதனை 
ஒளியும் ஒளிசான்ற செய்கையும் சான்றோர் 
தௌpவுடையன் என்றுரைக்கும் தேசும் களி என்னும் 
கட்டுரையால் கோதுபடும் (அறநெறிக்காரம்)
என எடுத்துரைக்கப்படுகிறார். 

இதற்கெல்லாம் மருந்து எனும் அதிகாரத்தில் முடிவு கூறுவார் வள்ளுவர். பழவினையான் வருவன அதன் கழிவின் கண் அல்லது தீராமையின் அவை ஒழித்தது. ஏனைக் காரணங்களாவன உணவு செல்களது ஒவ்வாமை யாகலின், பிணிகளும் காரணத்தான் வருவன ஆயின. 

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 
வளிமுதலா எண்ணி மூன்று (941) 
பரிமேலழகர் உணவும் செயல்களும் ஒருவன் பகுதிக்கு ஒத்த அளவினவன்றி அதனின் மிகுமாயினும் குறையுமாயினம், ஆயுள்வேதமுடையாரால் வாதம் முதலாக எண்ணப்பட்ட மூன்று நோயும் அவனுக்குத் துன்பம் செய்யும். 

நூலோர் எண்ணிய எனவே, அவர் அவற்றான் வகுத்த வாதப்பகுதி பித்தப் பகுதி ஐப்பகுதி என்னும் பகுதிப்பாடும் பெற்றாம். அவற்றிற்கு உணவு ஒத்தலாவது சுவை வீரியங்களானும் அளவானும் பொருந்துதல். 

செயல்கள் ஒத்தாலாவது, மனம் மொழி மெய்களால் செய்யும் தொழில்களை அவை வருந்துவதற்கு முன்னே ஒழிதல். இவை இரண்டும் இங்ஙனமன்றி மிகுதல் குறைதல் செய்யின், அவை தத்தம் நிலையின் நில்லாவாய் வருந்தும் என்பதாம் என்பார் பரிமேலழகர். 

மணக்குடவர் : மிகினும் குறையினும் உணவும் உறக்கமும் இணைவிழைச்சும் தன் உடம்பின் அளவிற்கு மிகினும் குறையினும் எனக் கூறுவார். 
  இவ்வாறான நிலைகளில் பல்வேற் அறிஞர்களின்  உரைப் பொருத்தப்பாட்டால்  திருக்குறளின் பொருட்பால் உரை சிறப்புறக் காணலாம். 

தீப ஒளித் திருநாள்……….

·        வருடந்தோறும் வருகின்ற
வானவேடிக்கை.
வசதியானவர்களால்
வாழ்த்துப்பா பாடப்படுகின்றது.
வறியவர்களால்
வயிறெரியப்படுகின்றது.

·        அழகு ஆடைகள்
அசல் விலையை மறைக்க,
குடிசை வீட்டுக்காரி
கண்ணாடிக் கடைகளை
வெறித்துப் பார்த்துப்
பாதையோரமே
நமக்குப் பழக்கப்படுவதாக
விதியை எண்ணி,
குழந்தைகளை
விலைமதிப்பில்லா
பளபளக்கும் சரிகையாடையால்
மகிழ்ச்சிப்படுத்துவாள்.

·        ஆண்டுதோறும் அன்பை
அணுவளவேணும்
அறிந்திடா அண்ணன்,தம்பிகள்,
அக்கா,தங்கைகளுக்கு
அவசரகதியில் அனுப்புகின்றனர்
தீபாவளிச் சீரை
வாடிக்கையாக
வங்கிக் கணக்கில்.
சேமிப்பு எண்கள் மட்டுமே
சகோதரப்பாசத்தால்
இதயங்களைத்
தழுவுகின்றன.

·        இப்பொழுதெல்லாம்
தீபாவளியெனின்
பள்ளி மாணவனும்
மதுவின் வாசனையைத்
தேடுகின்றான்.
கல்வி கற்கும் காலங்களில்
கனவு.
கனவிலேனும்
கல்வியை அறிந்தானா?
பதில் சொல்லுமே
காலம்.

·        கல்லூரிக் கனவுகள்
கொஞ்சம் அதிகம்.
அப்பாவை அம்மாவை
கொஞ்சம் மிரட்டிப் பார்க்கும்.
காதைக் கிழிக்கும்
வானவெடியாய் சத்தம்.
சூழ்நிலை மறந்து
மயக்கம் கொள்ளும்.
ஒரே மோட்டார் வண்டியில்
வித்தைகள் காட்டும்.
ஆற்றுநீர் ஓடி வருவதுபோல்
வண்டியில் உல்லாசம்
காண்போரைக் கண்டு
காட்டுக் கூச்சல் போடும்.
வயதை மீறிய பேச்சு.
காலக் கொடுவினையா?·        கையில் மகனைப்
பிடித்துக் கொண்டு
சாலையோரம் சற்று
பயந்து ஒதுங்குகையில்
பாவம் இவர்களின்
பெற்றோர் எனச்
சின்ன நினைப்பினூடே
வந்து போகிறார் அப்பா!
அப்பா ………….
எத்தனை முறை
சங்கடப்பட்டிருப்பார்?
காலம் கற்றுக்கொடுக்கிறது

அனுபவங்களை.