Blogger Tricks

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Pages

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

பேசுவோம்...பேசாமல்....

பேசுவோம் பேசாமல் ….


அறிவியலின் வளர்ச்சி
முகப்புத்தகம் வரையிலான
முதிர்ச்சி.

இழந்து போன
நட்புகளைத் தேட
நல்லதோர் வலை.

விரல்கள் விரைந்து
உன் பெயரைத்
தட்டச்சிடும்பொழுதெல்லாம்
உன் பெயரில்
எவெரெவரோ இருக்க
எவர் பெயரில்
நீ ஒளிந்து கொண்டாய்!

முகப்புத்தகத்தில்
வந்து விழுகின்ற
வார்த்தைகளில்,வசனங்களில்
ஏதேனும் உன்
மனவலியாக இருந்திடுமோ?
இல்லை,
மகிழ்ச்சியான
புகைப்படங்கள்
உன் கைவண்ணமாக
உதித்திருக்குமோ  ?
என்ற ஏக்கமும்
ஆசையும்
அன்றாடம்
வலியைத் தருகின்றன.

நம் முதல் சந்திப்பில்
முற்றும் பதிந்ததாக
உன் முகம்
என் நினைவிலில்லை.

ஆனாலும்,
ஒரு தென்றல் வந்தமர்ந்த
தடயம் போல்
ரணமாகியிருந்தது.

பூக்கள் பூக்கும்
அழகை ரசிப்பது
ஒரு விதசுகம்.
நீ ! பூ தானே ?

உனது வசீகரம் என்பது
தோற்றப் பொலிவல்லவே!
பேச்சினில் கஞ்சத்தனம்.
சிரிப்பினில் வெள்ளைமனம்.
விழிகள் உருட்டி
மூக்கைச் சுழித்து
அப்படியான ஒரு
முக பாவனை.
இவ்வளவுதான்.

நீ என்னுடைய
எந்த நினைவுகளுக்கும்
கட்டுப் பட்டாமல்
கொஞ்சம்
கட்டு செட்டாய் இருந்தாய்.
அதுதான் உன்னை
எனக்குள் இழுத்ததோ ?

நீ  ! கல்லூரி
நந்தவனத்திற்குள்
வந்து போன நேரமெல்லாம்
மனசுக்குள்
மதகின் வழி  பாயும்
வெள்ளத்தின்  வேகம்.
காலைக் கதிரொளி
பூக்களில் படரும்
நேசம்.

நீ !
சிரித்து மகிழும்
சிலவேளைகளில்
செவ்வந்தியாய்ப் பூத்து
இதழ் விரிப்பாய்.
நட்புகள் உன்னைச்
சீண்டினாலோ
வானவெடியாய்ச்
சிதறி வெடிப்பாய்.

வகுப்புத் தொடங்கும் நேரம்
கண்கள் சந்திக்க நேர்ந்தால்
தோழமையுடன்
கொஞ்சம்
சிரித்து வைப்பாய்.
வினா கேட்கப்படும்
வேளைகளில்
விடையைச் சொன்ன பின்பு
சரியோ என
ஓரக்கண்களால்
ஒப்புதல் பெறுவாய்.

உனக்கும் எனக்குமான
உறவின் இடைவெளி
இவ்வளவு தான்.
ஆனால்…..
இருந்தும்……. இருந்தும்………..
உன் தந்தையோடு
கல்லூரியின் கடைசி நாளில்
கையசைத்த போதுதான்
எதையோ
இழந்ததை உணர்ந்தேன்.

பறவை சிறகை இழந்ததோ ?
பூக்கள் 
வாசம் மறந்ததோ ?
கனவுகள் 
வண்ணம் கரைந்ததோ ?
தெரியவில்லை..
எதுவெனத் தெரியவில்லை.

ஆம் !
என்னை அறியாமலேயே
உன்னை எனக்குள்
போர்த்தி வைத்துள்ளேன் போலும்.

நீ திரும்பும்  திசையெல்லாம்
நானாக இருக்க
ஆசைப்பட்டதோ  
என் நெஞ்சமே?

உனக்காக
என்னை வருத்தி
என்னைச் சமைத்த
துயரத் தருணங்கள்
உனக்குத்
தெரியாமல் போனது
உனது தவறல்ல !

நகர வாழ்க்கைக்கும்
அசுர மனசுக்கும்
மனசு அடிமையானதன்
உச்சம் நீ .
ஆதலின்
கிராமம் நான்
தடுமாறிப் போனேன்
சிறு அச்சத்தால்.

அன்பே !
இன்றைக்கும் அந்தத்
துயர நினைவுகளும்
நிகழ்வுகளும்
மனம் துயருறும் வேளைகளில்
கதகதப்பான
போர்வைகளாகின்றன.


உலகம் உருண்டைதான்
ஒரு நாள் சந்திப்போம்
பேசாமடந்தைகளாய்…….
யாரோ ஒருவருடைய
மனைவியாகவும்
கணவனாகவும் !