Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Tuesday, December 31, 2013

அம்மா ! நீ வருவாயா ...







   அம்மா !
நாங்கள்
ஊருக்கு வருகிறோம்
எனும் தொலைபேசி ஒலி
உனக்கு
மாதா கோயில்
மணியோசைதான்.

·        எங்களின்
வருகைச் செய்தி
உன்னுடைய
சுருங்கிப்போன
இரத்த நாளங்களில்
உருவாக்குமே
பெரும் ஆழிப் பேரலையை .

·        தோட்டம் துறவுகள்
தூய்மை பெறும்
துப்பட்டிகள்
நிறம் மாறும்.
தலையணைகள்
புது வண்ணம் பெறும்.

·        அடுக்களை
களைகட்டும்
அடிபம்பில்
சுத்த நீரூறும்.

·        கடைசி வீட்டு
நாட்டுக்கோழி முதல்
கசாப்புக்கடையின்
கறியாடுவரை
உன்னால்
உறுதிசெய்யப்பட்டிருக்கும்.

·        சிலவேளைகளில்
காய்கூட
கறியாய் ருசிக்கும்
கைப்பக்குவம்
உன்னுடையது.

·        அம்மா!
நீ வாழ்ந்து
எனைப் பெற்று வளர்த்த
வளமான மண்ணைத்
தொடும்போதெல்லாம்
உன் நெஞ்சைத் தொடும்
ஈரம் உணர்கிறேன்.

·        பயணிகள்
வருகையை எதிர்நோக்கும்
பேருந்து நிழற்குடையாய்
விடியலிலே
அமர்ந்திருப்பாயே
நீ என்னை
எதிர்பார்த்து.

·        பிள்ளைகளைக்
கண்டதும்
சூரிய  விடியல்
புலராத பொழுதிலும்
உன் முகத்தில் தெரியுமே
ஒரு ஒளி
            அதை வேறு எங்கேனும்
            கண்ட நினைவில்லை.

·        பிள்ளைகளை
இடுப்பில் சுமந்து
வெற்றி பெற்று
வீடு திரும்பும்
ஒரு போர்வீரனைப் போல்
பெருமிதமாய்
முன்னே செல்வாய்.
·        அம்மா !
நீ பாசத்தின் உவமை.
நான் உன்னிடம் கண்டது
பூமியின் பொறுமை.

·        உன்
வாழ்க்கைப் போரில்
சூறாவளிக்காற்றுச்
சுழன்று அடித்தபோதும்
சரி,
உறவுகள் உன்னை
எள்ளி
நகையாடிய போதும் சரி,
மனம்
கட்டுக்குலையாத
கட்டுமரமல்லவா நீ!

·        உன் உடம்பின்
தோற்சுருக்கம்
அனுபவங்களின்
பெருக்கம்.
அதை
அனுபவிக்கவோ
நீ சொல்லக் கேட்கவோ
ஆண்டுகள் பலவாகும்.

·        நீ தனிமரமான போது
செல்லரித்துப் போன
காகிதங்களும்
உளுத்துப் போன
குப்பைகளும்
புலம்பிய புலம்பல்களை
ஒரு புன்முறுவலால்
உதைத்துத் தள்ளிய
உன் உள்ள வலிமை
யாருக்கு வரும்?


·        நானறிந்து
உன் வாழ்வில்
தென்றல்
வந்து போனதாய்
வரலாறே இல்லையம்மா!

·        உன் முகத்தில்
சூழ்ந்த
சோகச் சுவடுகள்
என்றும்
அழிந்ததில்லையே!
நீ வாழ்ந்த காலத்தில்
வசந்தம் வீசிய
வாசத்தையேனும்
நுகர்ந்ததுண்டா அம்மா?


·        துக்கம் என்
தொண்டைக்குழியை
அடைக்கும் போதெல்லாம்
நீர் வார்ப்பது
உனது
நினைவலைகள் தான்.

·        நோய் நொடிகள்
அண்டாத
உன் தேகத்தைக்
என்னுடைய பாசமா
குலைத்தது?
நமக்குப் பின்
யார் கவனிப்பாரென்னும்
பேரப்பிள்ளைகளின்
கவலைகளா ?

·        ஊருக்கு
வந்த பொழுதெல்லாம்
கொம்பைத் தழுவும்
கொடி போல
என் மகள்
தென்றல் போல
உன்
கழுத்தைத்
தழுவிக் கிடப்பாளே!

·        நினைத்துக் கூடப்
பார்க்க முடியாத
தூரம் வரை நீ
தனியே சென்றது
ஏனம்மா?
நானும்
உன்போலத்
தனிமரமானது நியாயமா?
விடை சொல்ல
இங்கு யாருண்டு ?


·        இன்று
நீயில்லாத ஊரை
நினைத்துப் பார்க்கக் கூட
மனம் வரவில்லை.
நேரமுமில்லை.
காவிரி பாயாத
ஆற்றுப்படுகையாய்
உன் நினைவுகளும்
நீ உறங்கிப் போன
வருத்தங்களும்
கண்ணுக்குள்
நீர் வற்றிக் காய்கின்றன.

·        ஆற்றின் கரையோரமாய்
ஒரு வழிபோக்கன் போல
நான் வந்து செல்வது
கடமைக்காக அல்ல.
ஊரோரமாய்
நீ உறங்கிக் கொண்டிருக்கும்
உன் கல்லறையைத்
தரிசிப்பதற்காக.



Tuesday, December 24, 2013

வெளையாட்டுக்காரி.....................

வெளையாட்டுக்காரி………..
·         அடியே !
வெளையாட்டுக்காரி…
ஒருநாள்
பள்ளிக்கூடம் விட்ட
ஒரு வெள்ளிக்கிழமையில்
ஓர் ஒப்பந்தம் போட்டாய்
நாளை விளையாடுவதென..

·         கருக்கல் கழியுமுன்னே
பாவாடை தடுக்கிவிழ
விளையாட வாவென்று
கூவி அழைத்த
அந்த அறியாப்பேதை
இன்று எங்கே?
அலைபாயும் மனசு..

·         கண்களைக் கட்டி
என்னெதிரே நின்றுகொண்டு
கண்டுபிடி,கண்டுபிடியெனக்
கத்திய உன் குரலைக் கேட்டு
உன்னைக் கைகளால்
கட்டிப் பிடித்ததென் பாவமா?
இப்போ கண் விழித்துக்
காத்திருக்கேன்,
காததூரம் வரை
உன்னைக் காணலியே!

·         வெளையாட்டுக்காரியே !
இப்படியான
நம் உறவில்
விதியொன்று வெளையாடிப்
போனதால்
நீ பெரிய மனுசியானாய்.
என் உறவுகளின்
சதி சதுராடியது
நான் ஏழை என்பதால்.
அன்புக்கு முன்னே
சதியாவது,
விதியாவது,
இது இந்த ஊமையின்
மொழியாகிப் போனது.

·         ஓடிப் பிடித்து விளையாடுவது
உனக்குப்
பிடித்தமான ஒன்று.
அதனால்தான்
ஊருறங்குகையில்
உனக்குப் பிடித்தமானவனுடன்
ஓடிப் போனாயென
ஊர்கூடிப் பேசுதடி.
அதை ஏற்க மறுத்த
என் மனசோ நினைக்கிறது
இது
உனக்குப் பிடித்தமான
பதுங்குமூஞ்சி
விளையாட்டென்று.

·         நீ! விபரமறியாப் பேதையடி
கோட்டான் கோட்டான்
ஆத்துல ஒரு மீன் புடிச்சேன்னு
பாட்டொன்னு பாடி
நீ குளத்திலல்லவா
மூழ்கி எழுந்தாய்.
இன்றோ என்னை
ஒரேயடியாய் தலைமுழுகினாய்,.

·         அன்று
ஆபியம்,மணியாபியம்
என்று
என்னைக் குனியச் சொல்லிப்
தாண்டியவளே!
இன்று,
என்னைத் தலைகுனிய வைத்து
என் அன்புக்கோட்டையை
ஏனடி தாண்டினாய்?

·         என்னை
ராசா வேசம் போடச் சொல்லி
வீரபாண்டியக்கட்டபொம்மன் போல
கரியைக் குழைத்தெடுத்து
கண்ணத்துல வரைஞ்சியே
மீசை ஒன்னு,
இன்று,
என் முகமெல்லாம் கரியாக
நீ செய்த
காரியமென்னடி?

·         களத்துமேட்டு நடுவுல
கையக்கட்டி உக்காரவெச்சு
கானக்குயிலு போல
கட்டைக் குரலெழுப்பிப்
பாடுனியே ஒரு பாட்டு.
காலம் பல கடந்தாலும்
பாழும் நெஞ்சுக்குள்ளே
இன்னும் வாழுமடி.
இன்னிக்கு
ஊர்கூடி என்னப் பார்த்து
கைகொட்டிப் பாடுதடி
ஒரு பாட்டு,
அடி பாதகத்தி!
எம்மனசு போடுதடி
கூப்பாடு.

·         அப்பா,அம்மான்னு
ஒரு வெளையாட்டு
இருப்பதாய்
அறியாத ,புரியாத
ஆரம்ப வயசுல
எனக்குச் சொல்லிச் சொல்லிப்
போனவளே,
கடைசிவரை நீ
என்ன ஆனன்னு
எனக்கும் தெரியலடி
உன் நினைப்பில்
உயிர் வாழும்
நானின்னும்
அப்பாவா ஆகலடி…


·         சுனாமி வந்தமர்ந்து
கொலுவிருந்து போன
ஒரு தனித்தீவாய்
நான் இருக்கேன்.
ஒரு
நூறாங்குச்சி
வெளையாட்டுப்போல
என் வாழ்க்கையை
சிக்கலாக்கிப் போட்டியே,,


·         அடைமழைப் பெய்து முடிந்த
ஒரு நாள் மாலையில்
சில்லு விளையாடுவதாய்
பூமியின் நெஞ்சைக்
கீறிப் பிளந்து
கட்டம் கட்டமாய்
கோடுகளைக் கிழித்தாய்
ஒரு சோதிடக்காரன் போல்.
சில்லு விட்டெறிந்து
கண்களை மூடி
ஒரு கையால்
பாவாடையைச் சற்று
மேல் தூக்கிப் பிடித்து
பாதங்களை மெல்ல
எடுத்து வைத்தாய்
ரைட்டா ரைட்டா என்று
அத்தனையும் தப்புத்தப்பாய்.
இன்றும் அதுதானா…?

·         தீப்பெட்டியில் நூலைக்கட்டி
ஒரு முனையில் நீயும்
மறு முனையில் நானும்
அலோ,அலோ சௌக்கியமா?
என்று கேட்டுக்கொண்டபோது
மனசுக்குள் அடைமழைதான்.
இன்றோ
உன்னைத் தொடர்பு கொள்ள
அத்தனையும் மொத்தமாய் இருந்தும்
எந்த எண்ணில் நீ
தொலைந்தாயடி?

·         இப்பொழுதெல்லாம்
கிராமங்களில்,
நீ விளையாடி ஓய்ந்த
விளையாட்டுக்களை
பிள்ளைகள் எவரும்
விளையாடுவதில்லை.
காலம் மாறிப் போச்சு.
அவரவர் வீடுகளில்
ஊடகங்கள் விளையாடப்
பக்குவாய்ப் பழகிவிட்டன.

·         நீ விளையாடிப் போன
தடயங்களாய்
இன்னும் நான்
இருக்கிறேன் மிச்சமாய்.
ஒரு தேவதை
வந்து போன தேசமாய்
இன்னும் குதூகலப்படுகிறது
நெஞ்சமே,

·         அடியே! வெளையாட்டுக்காரி,
செத்துச் செத்துப் பிழைக்கிற
வெளையாட்ட மட்டும்
நீ ! ஏனடி சொல்லித் தொலைக்கல?

·         கிழக்கில் உதிக்கிற
சூரியன் போல
ஒரு நாள்
வந்துதிக்க மாட்டாயா?
ஒரு தேவதைபோல!
நீ எங்கு சென்றாயென்ற
புதிரை விடுவிக்க மாட்டாயா?
ஒரு விடுகதை போல!
சீ.. போடி…
ஒன்னோட
நான் கா…………..






















Friday, December 6, 2013

பாட மறக்கும் பாட்டு


பாட மறக்கும் பாட்டு………

அதிவிடியலில்
ஒரு செய்தி துக்கத்தோடு!
நண்பர் என்ற உரிமையில்.

நண்பர்
அம்மாவின் மீது கொண்ட
அன்பு அளவிடற்கரியது.
ஆழ்கடல் அளவு.

அந்த நேரமே
அப்பாவின் நினைவுகள்
அலையாய் மோதின.

மாலையோடு
சென்ற என்னை
அழுது தழுவினார் நண்பர்.
ஆறுதல் கூறினேன்
கண்ணீரால்.

கால் வலியெடுக்க
ஆசனம் தேடி அமர்ந்து
கண்களைச் சற்றே மூடி
இரு கைகளால் துடைத்தபோது
“ எம்மாடியோவ்”என்று
பெருங்குரலெடுத்து
அழுகுரல் வந்த
திசை நோக்கிக்
கண் திறந்தேன்.

மூன்று தலமுறைக்கு
முந்தைய கிழவி ஒருவர்
தரையைப் பிளப்பது போல்
நெஞ்சிலும் தலையிலும்
அடித்துக் கொண்டு அழுதார்.

வகை வகையாய்
கதையெடுத்துக்
கடந்த காலம்
சொல்லி அழுதார்.

நினைவுகள் சற்றே
பின்னோக்க
அருக்காணி அக்கா
கண்களில் வந்து போனாள்.

பேருந்து நுழையாத
குக்கிராமம்.
தென்னை ஓலை வேய்ந்த
வரிசை வீடுகள்.

இரவு நேரத்தில்
அமைதியைக் கிழிக்கும்
அருக்காணி அக்காவின்
அழகிய குரல்.

குழந்தையைத் தூங்க வைக்கத்
தொன்று தொட்டுப்
பாடி வரும் தாலாட்டு.

தால் + ஆட்டு =தாலாட்டு
அக்கா
நுனிநாக்கை ஆட்டி ஆட்டி
“ லூ லூ லாயி லாயி ” என்று
பாடும் அழகே தனி.

அருக்காணி அக்கா
குழந்தையை மட்டுமல்ல
தாலாட்டால்
ஊரையே உறங்க வைத்தவள்.

தாம்  பிறந்தவீட்டு
வறுமையைச்
சொற்களால் வருணிப்பாள்
“ தாய்மாமன் படும்பாடு
பெரும்பாடு என்கண்ணே ”என்று
உறவின் மெல்லிதான பாலத்தை
வலிமையாக்குவாள்.

மூக்குத்தி அடமானத்தில்
மூலதனம் உருவான
உண்மை உரைப்பாள்.

ஆபத்துக்கு உதவாத
உறவுகளை
மென்மையாய் வைது
வைப்பாள்.


ஆனால்
நடுநிசி வரை
அவள் இமைகள்
மட்டும் ஏனோ
மூடமறுக்கும்.

வயிற்றின் வெறுமையா ?
மனத்தின் பெருஞ்சுமையா ?
யாரறிவார்?


அக்கா
எதையும்
வெளியில் சொல்லப்
பழகாதவள்.

காலம் செல்லச் செல்ல
அவள் செல்லப்பிள்ளையும்
பாட ஆரம்பித்தாள்
தாலாட்டு
மழலைக் குரலில்.
மரப்பாச்சிப் பொம்மையை
வைத்து.

எங்கள் ஊரில்
வீட்டுக்கொரு
அருக்காணி அக்கா
வாழ்ந்தாலும்
அவள் போல ஆகாது.

ஊரில்
மரணச் செய்தி பரவினாலும்
முதலில்
பெருங்குரலெடுத்துக்
கதறுபவள்
அவளே !

கைகளைத் தூக்கித்
தலையிலும்,மார்பிலும்
அடித்துக் கொண்டு அழுவதிலும்
ஒப்பாரி வைத்துப் பாடுவதிலும்
நடிக்கத் தெரியாதவள்
பிறரைப் போல.


அழுது முடித்து
வெளியில் வரும்போது
அவள் முந்தானையே
நனைந்திருக்கும்.
அப்படி ஒரு பாசம்
அவ்வளவு உரிமை.

அக்கா
கண்கள் சிவந்து
முகம் கழுவினாலும்
சிவந்த கண்கள் மாறாது.

ஒப்பாரிப் பாடலில்
தம் தந்தை ,தாயை
இழந்த சோகத்தை
இழையோட விடுவாள்.


உறவுகளுக்காக
இழவு கேட்க
வெளியூர் செல்ல
நேர்ந்தாலும்
அவள் தன்னை  
மாற்றிக் கொண்டவளில்லை.

அக்கா ஒரு நாள்
இறந்து போனாள்.
ஆற்று நீர்
அடித்துச்  செல்ல.
ஒப்பாரி வைப்பதற்கு
அவள் உடல் இல்லாமல்
ஊர் கூடி ஒப்புக்கு அழுதது.

தமிழன் கண்ட
அருமருந்துகள்
தாலாட்டு,ஒப்பாரி
மனச்சுமை மாற்ற.

இப்பொழுதெல்லாம்
எங்கு தாலாட்டுக் கேட்டாலும்
ஒப்பாரி ஓசை
காதுகளில் நுழைந்தாலும்
அருக்காணி அக்கா
நினைவுகளில்
மனம் உருகும்.

தீபாவளி,பிறந்த நாளெனப்
புத்தாடை எடுக்கச் செல்லும்
சமயங்களிலெல்லாம்
மகளோடு போட்டி.
எதை எடுப்பதென.
என்றுமே
பாவாடை ,தாவணி
போட்டியிட்டதில்லை.

நிஜங்களை மறந்து
நிழல்களைப் பூசிக்கும்
மனிதர்களுக்கு
எதைச் சொல்லி போதிக்க?

தொன்மையை மறக்கும்
மனமே!
பிறந்த நாள் தொட்டுப்
பழகிய மண்ணை மறப்பாயா?
வாய்வழி உண்ட தாய்ப்பால்
தொடங்கி
குடிநீர் வரையான
எல்லாம் துறப்பாயா?

வருங்காலத் தலைமுறை
மூக்கு சிந்தி அழுவதற்கு
மூளை இருக்குமா ?
அந்த வேளை வந்திடுமோ?
அச்சத்தில்
தவிக்கின்றேன்,

ஒருவேளை,
சத்தங்களின் யுத்தத்தில்
தாலாட்டும் ஒப்பாரியும்
தனிமைப் பட்டுப் போகலாம்?
மனசு கிடந்து தவிக்கிறது.
தாலாட்டு இல்லாமல்
தாய்ப்பால் சுரக்கலாமா?
ஒப்பாரி இல்லாமல்
பூதவுடல் வேகலாமா?

மேட்டுக்குடி மக்கள்
நடுத்தர வர்க்கம்
வறுமைப்பட்ட சமூகம்
இவர்களுள்
பாட மறுப்பவர்கள் யார்?
பாட மறந்தவர்கள் யார்?
பாட மறப்பவர்கள் யார்?

தாலாட்டும்,ஒப்பாரியும்
மண்ணின் தேவதைகள்.
என் மகளுக்கும்
இதைச்
சொல்லவேண்டியிருக்கிறது.
ஏனென்றால்
நான் தாலாட்டுக் கேட்டு

வளர்ந்தவன்.