Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Sunday, May 17, 2020


கானல் நீரா போனதடா  

ஊரெல்லாம் பரபரப்பு
ஊரடங்கு ஒலிபரப்பு
கண்ணாத்தா
காது கம்மல்
வழி பயணத்துக்குத்
தோதாச்சு .

ராணுவ வண்டி போல
பேருந்துகள்
அடைபட்ட கைதிகளாய்
பயணிகள்.

மூச்சுவிட இடமில்லாமல்
மனித முகம்
வறுமை உடம்புகள் ..

மடியில் ஒரு குழந்தை
சின்னாச்சி.
கண்ணாத்தா
வயிற்றில் ஒரு குழந்தை.

அச்சமும் பீதியும்
கண்களை விட்டு
அகலாமல்
உறக்கம் விழித்துக்
காவல் காத்தது.

ஒரு பொம்மையாய்
சின்னாச்சி மடியிலே .
மலங்க மலங்க
விழித்தபடி.

விடிஞ்சு போச்சுன்னா
வீடுபோய்
சேந்துடலாம்.
சொந்த பந்தம்
சூழ கொஞ்சம்
வாயாற உண்ணலாம்.

கண்ணசந்த நேரம்
பார்த்துக்
காட்டுக் கூச்சல்
லத்தி சத்தம்.

இறங்கச் சொல்லி
லத்திகள் கூவின.
பாஷைகள் புரியவில்லை.
தேச பார்டர் என்றது
அரசு ஆர்டர் என்றது.

பாதியில் முடிந்தது
பயணம்.
நாடோடிகளாய்
நாதியற்றவர்களாய்
நடை பயணம்
தொடர்ந்தது.


தொண்டைக் குழி
வற்றியது.
உச்சி வெயில்
பொசுக்கியது.
காற்று மட்டும்
இலவசமாய்..

குற்றுயிரும்
குலையுயிருமாய்
வயிற்றுப் புள்ளக்காரி

சத்திழந்த ஏழைக்கூலி
நடந்த களைப்பில்
என் கண் முன்னே
நொடிச்சு விழுந்து
உசுர விட்டா !
அனாதைப் பிணமாக ..

அழவும் தெம்பில்ல
அடக்கம் செய்ய
வழியில்ல.
மக்கள் மனுசங்கிட்ட
உதவி
கேட்கத் தோனவுமில்ல.

ஆபிசர் வந்தாங்க
அவசரமா பேசுனாங்க
கையெழுத்துக் கேட்டாங்க
கண்ணு மட்டும்
அழுதழுது வத்திப் போச்சுதங்கே

சின்னாச்சி மட்டும்
அம்மா அம்மான்னு
அழுது அரட்டுது.

நடையாக நடந்ததென்ன?
நொந்து நூலாகி
நாலுதேசம் தாண்டி வந்தா
நெத்தியில சூடு பாத்து
கையில சீலு வெச்சு
தனியாக இருக்கச் சொல்லி
அழைச்சிட்டுப் போனதென்ன
ஊரென்ன? பேரென்ன ?
ஆளுக்கு ஆள் மாறி
கேட்ட கேள்வி என்ன ?
நான் பொறந்த ஊருக்குள்ளே
தனிமையைச்
சுமந்ததென்ன? !

சொத்த அபகரிச்ச
சொந்தங்களைச் சொல்லவா?
நான் பொறந்த
ஊருக்குள்ள
நாதியத்துப் போன
நாசக்கதை சொல்லவா?
கால் வயிறு கஞ்சிக்கு
ஊருவிட்டு
எல்லைதாண்டி
உழைச்சு உருக்குலைந்த
துயரக்கதை சொல்லவா
கட்டுன பொண்டாட்டி
கண்முன்னே
வயித்துப் புள்ளையோட
உசுர விட்ட
விதியைச் சொல்லவா ?
கானல் நீரா போனதடா
வாழ்க்கை.
வானில் உள்ள கடவுளே
நீ எங்க ?

கொள்ளை நோயும்
கொடுமை வாழ்வும்
எங்களுக்கா?

கேட்க நாதியில்ல
கேவலம்
இந்த பிறவியின்னு
யாரு வந்து சொல்ல?

No comments:

Post a Comment