Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Friday, December 19, 2014

மார்கழிப் பூவே ..

மார்கழிப் பூவே ..













அன்பே !
இனிய விடியலில்
வாசலின் ஓரம்
நீ பூக்கவிருக்கும்
மார்கழி மாதம்
பீடை மாதமென்று
யார் சொன்னது ?

நீ !
வீட்டுக்கதவு திறக்குமுன்னே
வாசற்புறமெல்லாம்
பனித்துளி நீர் தெளித்திருக்கும்
வாடைக்காற்று
தூசு துடைத்திருக்கும்.
வானவில்லின் வண்ணங்கள்
கோலப் பொடியாயிருக்கும்.
எண்ணங்கள் வண்ணக்
கோலங்கலாய்ப் படர்ந்திருக்கும்.

உன்
முகத்தாமரைக் கண்டபின்னே
பொழுது சற்றுப்
புலரத் தொடங்கும்.
அம்மன் கோயிலின்
பாடல் புறப்பட்டு
உன் செவிகளைத் தாலாட்டும்.

உன்
மென்பஞ்சு விரலிரண்டு
கோலத்தைச்
சிலந்தியெனக் கூடுகட்டும்.

முன்னே கவிழ்ந்து விழும்
உன் கற்றைத் தலைமுடி
காற்றிலாடி, காற்றிலாடி
உன் காதோரமாய்ச்
சற்றொதுங்கி
என் வருகையை அறிவிக்கும்.
உன் தலை சற்று  நிமிர்ந்து
காலையில் பூத்த நட்சத்திரமாய்
கண்கள்
காதல் வணக்கம் சொல்லும்.

உன் முகத்தாமரையில்
தேன் குடித்த
வண்டு விழி
ஒரு மயக்கத்தில்
எனை நோக்கி வெறிக்கும்.
உதடுகளோ
உள்ளத்தை வெளிப்படுத்தத்
தயங்கி நிற்கும்.

ஒவ்வொரு வருடமும்
உன் பார்வையைப் போலவே
பொருள் ஏதும்
விளங்காமலேயே போயின
நீ புள்ளி வைத்துப் போட்ட
வெல்கம் கோலமும்
நல்வரவு கோலமும்.

தை பிறந்தால்
வழி பிறக்குமாம்.
ஆம் !
இந்த ஆண்டு உனக்கு
வாழ்க்கைப் பிறக்கப் போவதாய்
உன் அப்பனோடு சேர்ந்து
அசலூரும் பேசுது.

பூத்துச் சிரித்து
வாசம் பரப்பிய
உன் வீட்டிலிருந்து
யாரோ ஒருவன் தோளுக்கு
நீ மாலையாகப் போகிறாயாம் .

தை மாதங்களில்தான்
காதலும் கண்களும்
களவாடப்படும்.

இதோ !
மார்கழியின் கடைசி நாள்.
வீட்டு வாசலை அலங்கரிக்க
மான்குட்டியாய்த் துள்ளி வந்து
மாக்கோலமிடுகிறாய்.
ஏதுமறியாக் குழந்தையாக !

இனி வரப்போகும்
மார்கழிகளில்
உன் வீட்டு
வாசலுக்கு மட்டுமல்ல
வெறுமை.
என் மனசுக்கும் தான்.

மணமாலையோடு
நீ புறப்படத் தயாராகும்
தை மாதம்
இனி என் வாழ்வில்……. ?

Sunday, December 14, 2014

இருள்..

இருள்..
காற்று
சன்னலைத் திறந்து விட
நீண்டு ஒலிக்கிறது
ஒரு சில்வண்டின்
ரீங்காரம்..
வயிறு
நிறையாததன் வலியில்
ஈனமாக ஓலமிடும்
நாய்களோடு
மனிதர்களும்
தாயின் மார்பகம் தேடித்
தவிக்கும் குழந்தையாய்
படுக்க இடம் தேடும்
பாதசாரி..
பகலைக் குடித்து
இரவில் வீடு திரும்பும்
ஒரு கூலியின்
பழைய மிதிவண்டி
இரவினைத் தூங்க வைக்கத்
தாலாட்டுப் பாடுகிறது
கலைந்து போன
காதலைக்
கண்ணீரால் கழுவும்
ஒரு துக்கத்தின் ராகம்
விசும்பலாக
தூரத்தில்
விட்டு விட்டு
ஒலிக்கிறது….
பனிவாடைக் காற்றில்
பூத்த மரமல்லி
விட்டத்தின் வழியிறங்கி
வாசத்தால் போர்த்துகிறது
சுகந்தப் போர்வையால்
கடைசி வீட்டுச் சேவல்
நினைவூட்டிக்கொண்டே
இருக்கிறது
இன்னும்
உறங்கவில்லையென்றும்
ஏன் விடியவில்லையென்றும்
மதகின்வழி பாயும்
வெள்ளம்
சுழித்துச் சென்று
ஹோவெனக் கூவும்
பேரிரைச்சல்
துல்லியமாகக் காதில் விழ
மனம் இன்னும் கூர்மையாக !
நாளை வரும்
மகளுக்கான வரன்
குணமுடையதோ ?
குறையுடையதோ ?
சாதகம் சாதகமாகுமோ ?
எதிர்பார்ப்பு என்னவோ ?
ஏக்கம் நிரம்ப
தூக்கம் விடைபெற
மனைவி , மக்கள் ,
ஒவ்வொருவர் நெஞ்சங்களும்
நேர்த்திக் கடன்களைச்
செபங்களாக்கக்
இருள் கவ்விக் கிடக்கிறது
இரவு ..
பலமாக அடிக்கும்
காற்றில்
கிறீச் கிறீச் எனச்
சத்தம் எழுப்புகிறது ..
சுவற்றில் மாட்டப்பட்ட
அப்பாவின் புகைப்படம்
மனசுக்கு ஆறுதல்..

இருள் பரவிய மனதில்
வெளிச்சம்
விரைந்தோடுகிறது….
இருளை விரட்டி வருகிறது..
வண்டியில் பூட்டி
இலக்கு நோக்கிச் செல்லும்
வண்டிமாடுகளின்
கழுத்து மணியோசை

Wednesday, December 10, 2014

பூங்கொடி

பூங்கொடி

பூங்கொடி
விடியலை மணக்கச் செய்கிறாள்
இனிப்பு ஆப்பங்களை
ஒடியும் இடுப்பில் சுமந்து..

கிராமத்துக்
குழந்தைகளின்
காலை உணவிற்குக்
இரவிலேயே
தயாராகிறாள்.
மாவு குழைப்பது
வெல்லம்
அளவோடு சேர்ப்பது
அடுப்படியைச்
சுத்தம் செய்வது
என்றெல்லாம்..

பூங்கொடிதான்
பண்டமாற்று முறையின்
கடைசி எச்சம்..
ஒருபடி நெல்லுக்கு
இரண்டு ஆப்பங்கள்.

சில வேளைகளில்
மொத்தக் கூடையும்
கொள்முதலாகும்.

அவள் கைவிரல்கள்
அடுக்கிவைத்த
ஆப்பங்களினிடை புகுந்து
எண்ணிக்கையில்
வேகம் கூட்டி
விரைந்து
வியாபாரம் முடித்து
இடுப்பில் பாரம் ஏறும்
நெல்மணிகளாக ..

சிலரின் சுடு சொற்களைக்
காதுக்குக் கீதமாக்குவாள்
கடனேந்தும் கைகளின்
வயிற்றுப்பசியைக்
கடன் வாங்கி வருவாள் .

ஒவ்வொரு
விடியலின் இமைகளில்
சின்ன சிரிப்பலையைச்
சிந்த விட்டு
வளையவரும் இளசுகளுக்குச்
சகோதரப்பாசம் காட்டி
நல்ல உறவுக்குப்
பாலமிடுவாள்.

என்றோ பூத்த பூங்கொடி
ஒருநாள்
புகுந்த வீடு சென்றாள்
மணமகளாக !

ஏனோ
இலைஉதிர்ந்த
கொடியாகத்
திரும்பி வந்தாள்

வாழ்ந்ததன் அடையாளமாக
இரண்டு
கைக்குழந்தைகளுடன்.

இப்பொழுதெல்லாம்
பூங்கொடி சுட்ட ஆப்பம்
இனிப்பதில்லை.
அவள் வாழ்க்கையைப் போல !

Monday, September 29, 2014

இருள்..

காற்று 
சன்னலைத் திறந்து விட
நீண்டு ஒலிக்கிறது
ஒரு சில்வண்டின்
ரீங்காரம்..

வயிறு
நிறையாததன் வலியில்
ஈனமாக ஓலமிடும் 
நாய்களோடு
மனிதர்களும்

தாயின் மார்பகம் தேடித்
தவிக்கும் குழந்தையாய்
படுக்க இடம் தேடும்
பாதசாரி..

பகலைக் குடித்து
இரவில் வீடு திரும்பும்
ஒரு கூலியின்
பழைய மிதிவண்டி
இரவினைத் தூங்க வைக்கத் 
தாலாட்டுப் பாடுகிறது

கலைந்து போன 
காதலைக்
கண்ணீரால் கழுவும்
ஒரு துக்கத்தின் ராகம்
விசும்பலாக
தூரத்தில் 
விட்டு விட்டு
ஒலிக்கிறது….

பனிவாடைக் காற்றில்
பூத்த மரமல்லி
விட்டத்தின் வழியிறங்கி
வாசத்தால் போர்த்துகிறது 
சுகந்தப் போர்வையால்

கடைசி வீட்டுச் சேவல்
நினைவூட்டிக்கொண்டே
இருக்கிறது
இன்னும் 
உறங்கவில்லையென்றும்
ஏன் விடியவில்லையென்றும்

மதகின்வழி பாயும்
வெள்ளம் 
சுழித்துச் சென்று
ஹோவெனக் கூவும் 
பேரிரைச்சல்
துல்லியமாகக் காதில் விழ
மனம் இன்னும் கூர்மையாக !

நாளை வரும்
மகளுக்கான வரன்
குணமுடையதோ ?
குறையுடையதோ ?
சாதகம் சாதகமாகுமோ ?
எதிர்பார்ப்பு என்னவோ ?
ஏக்கம் நிரம்ப
தூக்கம் விடைபெற
மனைவி , மக்கள் ,
ஒவ்வொருவர் நெஞ்சங்களும்
நேர்த்திக் கடன்களைச்
செபங்களாக்கக்
இருள் கவ்விக் கிடக்கிறது 
இரவு ..

பலமாக அடிக்கும் 
காற்றில் 
கிறீச் கிறீச் எனச் 
சத்தம் எழுப்புகிறது ..
சுவற்றில் மாட்டப்பட்ட 
அப்பாவின் புகைப்படம்
மனசுக்கு ஆறுதல்..

இருள் பரவிய மனதில்
வெளிச்சம் 
விரைந்தோடுகிறது….
இருளை விரட்டி வருகிறது..
வண்டியில் பூட்டி
இலக்கு நோக்கிச் செல்லும்
வண்டிமாடுகளின்
கழுத்து மணியோசை
Top of Form
Bottom of Form


Tuesday, June 10, 2014

ஆதியிலே ...

ஆதியிலே

ஆதியிலே
இந்த நிலம்
நீரால் சூழப்பட்டிருந்தது.
நீரலைகளைக் கிழித்து
மண்மேடுகளை உயர்த்தி
புல்லும் கல்லுமாகத்
தொன்ம உயிராய்ப்
பிறந்தவன் நான்.

சிறு புல்லாய்
மண்ணில் படர்வேன்.
பெரும்பனையாய்
விண்ணைத் தொடுவேன்.
விண்ணும் மண்ணும்
என் ஆளுகையாகிப் போனது.

காலப்போக்கில்
தனித்துக் கிடந்த நான்
செடிகளும்
கொடிகளுமாய்ப்  பிறந்து
உறவாடிக் கிடந்தோம்.

மழையில் நனைவோம்
மகிழ்ச்சியோடு !
வெயிலில் காய்வோம்
வறட்சியோடு.

நாம்
நிலமாய் இருக்கையில்
எம் வயிற்றைக் கீறி
உழுது எடுத்து
உணவு சமைத்தனர்
விளைந்து மகிழ்ந்தோம்.

நாம்
நீராய் இருக்கையில்
வரப்புக் கட்டி
வாய்க்கால் வெட்டிப்
பிரித்துக் கொடுத்தனர்.
அருவியில் ஓடையாய்
அழகு காட்டினோம்
பசித்து வந்தோருக்கு
அன்னமூட்டினோம்.

காற்றாய்த் திரிந்தோம்
தென்றல் ஊற்றாய்
விரைந்தோம்.

காலம் முற்றிக்
கலியாய்ப் போனது.
சுயநலம் பெருக
அணைத்துக் கிடந்த
ஒருவருக்கொருவர்
அடித்துக் கிடந்தோம்.

உலக நாட்டாண்மை
உரிமையில் தலையிட
வந்தவன் ,போனவன்
என்றெல்லாம் வந்து
வஞ்சித்துப் போனார்கள்.

பாசமாய்க் கிடந்தவர்கள்
பாதை கிழித்து
எல்லை வகுத்து
சிம்மக் குரலாய்
கர்ச்சித்து எழுந்தனர்.

மகிழ்ந்து கிடந்த
எங்கள் தாய்மடியைக்
கைவைத்து
மலடாக்கினர்.

நாங்கள்
வெடித்து முளைத்த
தடாகங்களைப்
பட்டா என்றனர்.
பங்குபோட்டனர்.

கனரகங்கள்
வாகனங்களாய்
துவைத்தெடுத்து
எம் உயிர்களைக்
கிள்ளி எறிந்து
கொத்துக் கொத்தாய்க்
கொத்திப் போட்டு.
வேரடி மண்ணாய்ப்
பிடுங்கி எறிந்தனர்.

அன்று துளிர்த்த
அரும்புகளையும்
திமிர் நகங்களால்
கிள்ளி எறிந்தனர்.


நாம்
வீரியமாக
வெடித்துத் திமிறி
எழுந்த நிலத்தைத்
தரைமட்டமாக்கினர்.
முள்வேலி அமைத்தனர்.
ஆழத் தோண்டினர்.
வானளாவக் கட்டிடங்கள்
விரைந்தெழுப்பினர்.
அழவும் சக்தியின்றி
அமைதியாகிப் போனோம்
அரவணைக்க ஆளின்றி.

நாற்று முளைத்த
சேற்று வயல்களில்
மாட மாளிகைகள்
அவரவர்
வசதிகளுக்கேற்ப
முளைத்துக் கிடந்தன!
கொள்ளையடித்தது
கொஞ்சம்.
உழைத்துச் சேர்த்தது
கொஞ்சம்.
ஓட்டாண்டியாய் ஆனது
கொஞ்சம் என !

நிலத்தை மறைத்து
அழகுக் கற்கள்
நிரப்பி வைத்தனர்.

ஒரு நாள்
சூரியன் விழித்த
ஓர் இடுக்கினூடே
தலையை நீட்டித்
தாகமாய்ப் பார்த்தேன்.
என் தாய்,
என் உலகம்,
என் உழைப்பு,
என் பரம்பரைகள்,
எவரையும் காணவில்லை.
உலக சந்தைகளின்
சூழ்ச்சிகளுக்கு
இரையானார்களோ ?

என் இதழ்களின் வழியே
கண்ணீர் கசிந்தோட
கடந்த காலங்களைத்
திரும்பிப் பார்த்தேன்.

அப்பொழுது,
ஒரு சின்னக் குழந்தை
ஓடிவந்து
என்னைச்
சினேகமாய்ப் பார்த்தது.
பிஞ்சுக் கைகளால்
மெல்ல வருடிக் கொடுத்தது
நன்றியாக இருக்குமோ ?

அது,
ஆர்வ மிகுதியில்
ஓடிச் சென்று
நாக்குழறிக் குழறி,
தம் அப்பாவிடம்
அறியாமையில் சொன்னது
“அப்பா !அப்பா!
நம்ம வீட்டுச் சுவரோரம்
அரிசி மொளைச்சிருக்கு”
என்று !

அவ்வளவுதான்
அந்த
வரலாறு தெரியாத
ஆதி மனிதனின்
பரம்பரை ஒருவன்
முண்டா தட்டி வந்தான்
முறுக்கிய மீசையோடு.

தன் கொடூரக் கரங்களால்
என்னைக் குதறி எடுக்க
முற்பட்டு
ஓங்கி ஓங்கி மிதித்தான்
என்னைக் கண்ட
வெறியில்,

ஆதியிலே
நான் கொண்ட
என் முழுபலத்தையும்
வெளிப்படுத்தித்
“ தூ ! என்று துப்பினேன்
கோபத்தோடு.

இனி,
நானின்றி
உன் வயிறு நிறையாது
என்ற
சாபத்தோடு.

பிணைந்து கிடந்த
வேர்களும்
மகிழ்ந்து கிடந்த
உறவுகளும்
சிதைந்து போனதே
என்ற ஏக்கத்தோடு!