ஆதியிலே
ஆதியிலே
இந்த நிலம்
நீரால் சூழப்பட்டிருந்தது.
நீரலைகளைக் கிழித்து
மண்மேடுகளை உயர்த்தி
புல்லும் கல்லுமாகத்
தொன்ம உயிராய்ப்
பிறந்தவன் நான்.
சிறு புல்லாய்
மண்ணில் படர்வேன்.
பெரும்பனையாய்
விண்ணைத் தொடுவேன்.
விண்ணும் மண்ணும்
என் ஆளுகையாகிப் போனது.
காலப்போக்கில்
தனித்துக் கிடந்த நான்
செடிகளும்
கொடிகளுமாய்ப் பிறந்து
உறவாடிக் கிடந்தோம்.
மழையில் நனைவோம்
மகிழ்ச்சியோடு !
வெயிலில் காய்வோம்
வறட்சியோடு.
நாம்
நிலமாய் இருக்கையில்
எம் வயிற்றைக் கீறி
உழுது எடுத்து
உணவு சமைத்தனர்
விளைந்து மகிழ்ந்தோம்.
நாம்
நீராய் இருக்கையில்
வரப்புக் கட்டி
வாய்க்கால் வெட்டிப்
பிரித்துக் கொடுத்தனர்.
அருவியில் ஓடையாய்
அழகு காட்டினோம்
பசித்து வந்தோருக்கு
அன்னமூட்டினோம்.
காற்றாய்த் திரிந்தோம்
தென்றல் ஊற்றாய்
விரைந்தோம்.
காலம் முற்றிக்
கலியாய்ப் போனது.
சுயநலம் பெருக
அணைத்துக் கிடந்த
ஒருவருக்கொருவர்
அடித்துக் கிடந்தோம்.
உலக நாட்டாண்மை
உரிமையில் தலையிட
வந்தவன் ,போனவன்
என்றெல்லாம் வந்து
வஞ்சித்துப் போனார்கள்.
பாசமாய்க் கிடந்தவர்கள்
பாதை கிழித்து
எல்லை வகுத்து
சிம்மக் குரலாய்
கர்ச்சித்து எழுந்தனர்.
மகிழ்ந்து கிடந்த
எங்கள் தாய்மடியைக்
கைவைத்து
மலடாக்கினர்.
நாங்கள்
வெடித்து முளைத்த
தடாகங்களைப்
பட்டா என்றனர்.
பங்குபோட்டனர்.
கனரகங்கள்
வாகனங்களாய்
துவைத்தெடுத்து
எம் உயிர்களைக்
கிள்ளி எறிந்து
கொத்துக் கொத்தாய்க்
கொத்திப் போட்டு.
வேரடி மண்ணாய்ப்
பிடுங்கி எறிந்தனர்.
அன்று துளிர்த்த
அரும்புகளையும்
திமிர் நகங்களால்
கிள்ளி எறிந்தனர்.
நாம்
வீரியமாக
வெடித்துத் திமிறி
எழுந்த நிலத்தைத்
தரைமட்டமாக்கினர்.
முள்வேலி அமைத்தனர்.
ஆழத் தோண்டினர்.
வானளாவக் கட்டிடங்கள்
விரைந்தெழுப்பினர்.
அழவும் சக்தியின்றி
அமைதியாகிப் போனோம்
அரவணைக்க ஆளின்றி.
நாற்று முளைத்த
சேற்று வயல்களில்
மாட மாளிகைகள்
அவரவர்
வசதிகளுக்கேற்ப
முளைத்துக் கிடந்தன!
கொள்ளையடித்தது
கொஞ்சம்.
உழைத்துச் சேர்த்தது
கொஞ்சம்.
ஓட்டாண்டியாய் ஆனது
கொஞ்சம் என !
நிலத்தை மறைத்து
அழகுக் கற்கள்
நிரப்பி வைத்தனர்.
ஒரு நாள்
சூரியன் விழித்த
ஓர் இடுக்கினூடே
தலையை நீட்டித்
தாகமாய்ப் பார்த்தேன்.
என் தாய்,
என் உலகம்,
என் உழைப்பு,
என் பரம்பரைகள்,
எவரையும் காணவில்லை.
உலக சந்தைகளின்
சூழ்ச்சிகளுக்கு
இரையானார்களோ ?
என் இதழ்களின் வழியே
கண்ணீர் கசிந்தோட
கடந்த காலங்களைத்
திரும்பிப் பார்த்தேன்.
அப்பொழுது,
ஒரு சின்னக் குழந்தை
ஓடிவந்து
என்னைச்
சினேகமாய்ப் பார்த்தது.
பிஞ்சுக் கைகளால்
மெல்ல வருடிக் கொடுத்தது
நன்றியாக இருக்குமோ ?
அது,
ஆர்வ மிகுதியில்
ஓடிச் சென்று
நாக்குழறிக் குழறி,
தம் அப்பாவிடம்
அறியாமையில் சொன்னது
“அப்பா !அப்பா!
நம்ம வீட்டுச் சுவரோரம்
அரிசி மொளைச்சிருக்கு”
என்று !
அவ்வளவுதான்
அந்த
வரலாறு தெரியாத
ஆதி மனிதனின்
பரம்பரை ஒருவன்
முண்டா தட்டி வந்தான்
முறுக்கிய மீசையோடு.
தன் கொடூரக் கரங்களால்
என்னைக் குதறி எடுக்க
முற்பட்டு
ஓங்கி ஓங்கி மிதித்தான்
என்னைக் கண்ட
வெறியில்,
ஆதியிலே
நான் கொண்ட
என் முழுபலத்தையும்
வெளிப்படுத்தித்
“ தூ ! என்று துப்பினேன்
கோபத்தோடு.
இனி,
நானின்றி
உன் வயிறு நிறையாது
என்ற
சாபத்தோடு.
பிணைந்து கிடந்த
வேர்களும்
மகிழ்ந்து கிடந்த
உறவுகளும்
சிதைந்து போனதே
என்ற ஏக்கத்தோடு!
No comments:
Post a Comment