பூங்கொடி
பூங்கொடி
விடியலை
மணக்கச் செய்கிறாள்
இனிப்பு
ஆப்பங்களை
ஒடியும்
இடுப்பில் சுமந்து..
கிராமத்துக்
குழந்தைகளின்
காலை
உணவிற்குக்
இரவிலேயே
தயாராகிறாள்.
மாவு குழைப்பது
வெல்லம்
அளவோடு
சேர்ப்பது
அடுப்படியைச்
சுத்தம்
செய்வது
என்றெல்லாம்..
பூங்கொடிதான்
பண்டமாற்று
முறையின்
கடைசி எச்சம்..
ஒருபடி
நெல்லுக்கு
இரண்டு
ஆப்பங்கள்.
சில வேளைகளில்
மொத்தக்
கூடையும்
கொள்முதலாகும்.
அவள்
கைவிரல்கள்
அடுக்கிவைத்த
ஆப்பங்களினிடை
புகுந்து
எண்ணிக்கையில்
வேகம் கூட்டி
விரைந்து
வியாபாரம்
முடித்து
இடுப்பில்
பாரம் ஏறும்
நெல்மணிகளாக ..
சிலரின் சுடு
சொற்களைக்
காதுக்குக்
கீதமாக்குவாள்
கடனேந்தும்
கைகளின்
வயிற்றுப்பசியைக்
கடன் வாங்கி
வருவாள் .
ஒவ்வொரு
விடியலின்
இமைகளில்
சின்ன
சிரிப்பலையைச்
சிந்த விட்டு
வளையவரும்
இளசுகளுக்குச்
சகோதரப்பாசம்
காட்டி
நல்ல உறவுக்குப்
பாலமிடுவாள்.
என்றோ பூத்த
பூங்கொடி
ஒருநாள்
புகுந்த வீடு
சென்றாள்
மணமகளாக !
ஏனோ
இலைஉதிர்ந்த
கொடியாகத்
திரும்பி
வந்தாள்
வாழ்ந்ததன்
அடையாளமாக
இரண்டு
கைக்குழந்தைகளுடன்.
இப்பொழுதெல்லாம்
பூங்கொடி சுட்ட
ஆப்பம்
இனிப்பதில்லை.
அவள்
வாழ்க்கையைப் போல !