Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Wednesday, March 25, 2015

தூளியில் தூங்கும் தாலாட்டு



பட்டாம்பூச்சியென
வண்ண,வண்ணக் கனவுகளுடன்
பிறந்தேன்.
ஒருபட்டுப் புழுப்போலக்
காலச்சிறையில்
அடைந்தேன்.

ஒரு நதிபோலத்தான்
நடை பழகி வந்தேன்.
அழகு வானவில்லாய்
வளைந்து கிடந்தேன்.

இன்று
இமை சிந்தும்
மழைநேர இரவுகளில்
கேள்விக்குறிகளாய்
உறைந்து கிடக்கிறேன்.

அதோ!
அந்தச் சிட்டுக்குருவிபோல்
கண்கள் படபடக்க
சிறுகுழந்தையென
அதிசயித்து நின்ற
அழகுகள் ஆயிரம்.

இதோ !
ஒற்றைப் பனையென
வெட்ட வெளிதனில்
யாசித்து நிற்கிறேன்
என் கனவுகளை
ஒரு தரம்.

நகரத்துத் தொழிற்சாலைகளில்
இந்தத்  தேவதையின்
அந்தி வானமும் ,
அழகு மேகமும்
உடைத்துப் போடப்பட்டது
உன் சூரியக் கிரணங்களால்.

ஒவ்வொரு விடியலின் போதும்
ஒரு எந்திரமாய்
எழுகிறேன்.
குளிக்கையில் சிந்தும்
நீர்துளிகளில்
நான் களவுபோனதை
தினம் உணர்கிறேன்.

அவசரமாய் விழுங்கும்
உணவெனப்
பயணங்களில் அமிழ்கிறேன்.
பொங்கும் அலையென
எழும்பி அமிழ்ந்து
சிறு படகென மிதந்து
அலுவலைத் தொடங்கும்போது
தொலைந்து போனதாய்
உணர,
நான் எங்கே என்று
எவரிடம் கேட்க?

மாதமுடிவில் பெறுகிற
சலவை நோட்டுக்களில்
உன் கண்ணோட்டம்.
அதில்,
உடைந்துபோன
என் மனதின்
அழுகுரல் கேட்கிறதா
உனக்கு ?

பச்சைவெளிகளெனப்
படர்ந்து கிடந்த என்னை
ஒரு நூலைக் கட்டி
எல்லைகள் வகுத்து
உரிமை கொண்டாடுகிறாய்.
என் அன்பின் எல்லை
எதுவெனத் தெரியும்
உனக்கு ?

தேங்கும் குட்டையாய்
நீ இருப்பது
உன் உரிமை என்பதால்
படித்துறைகளில் நான்
பாசியாய்
படர்ந்து கிடப்பதா ?
ஓடும் நதிநீரை
ஓட விடு !
அது இயற்கையின்
வரம்.

ஆடைகளாலும்
ஆபரணங்காளாலும்
எனை அதிசயிக்க வைக்கிறாய் !
நான்
அன்பில் திளைப்பேன் என்று !
நானென்ன பூச்செடியா ?
நட்டுவைத்தால் பூப்பதற்கு ?
நான் மனுசி .
உன் சக மனுசி .

கண்களால் பூசிக்கிறாய்
காதல் மொழி பேசுகிறாய்
அன்பினால் ஆராதிப்பதாய்
அபிநயம் புரிகிறாய்.
என்னை
எந்திரமாய் ஆக்கிவிட்டு !
நீயும்
ஒரு பிரம்மன் தான்
மறு பிறப்பாய்
எனை மாற்றியதில் !


எங்கே தேடுகிறாய்
என்னை வலைபோட்டு ?
அடேய் !
இன்னுமா புரியவில்லை
என் மனக்குரல் கேட்டு !
நான்
தூளியில் தூங்கும் தாலாட்டு !
அந்தத் தூளியே
நனைந்திடும்
என் கதை கேட்டு !
நீ ……….?