Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Wednesday, March 2, 2016

சிலுவை சுமந்தவள்

சிலுவை  சுமந்தவள்
அலங்கரித்துக் கிடக்கிறது
கல்லூரி மேடை
ஆம்!
கலைவிழாத் தொடங்கிற்று.

பயின்ற கல்லூரிக்குள்
பலகாலம் சென்றாலும்
நீயும் நானும்
சந்தித்துக்கொண்ட
அந்தக்
கலைவிழாப்போட்டிகள்
வாழ்வின் கல்வெட்டுக்கள்.

இன்றோ ..
நான்கு பேர்
அழைத்துச்செல்ல
நடுவராக நான்..

பார்வை
மேடையில் பதிய
நினைவலைகள்
நீண்ட துரம்
பின்னோக்கி ஓடுகின்றன..

சக தோழனாக
உன்னோடு பயணித்த
காலங்கள்
வாழ்வின் வசந்தங்கள்..

புத்தாண்டு பிறந்து விட்டால்
உனக்குள் பிறக்கும்
கலையுணர்ச்சி….

போட்டிகளின் போது மட்டும்
நீயும் நானும்
எதிரும் புதிருமாய்..

நீ கலைமகளின்
வரம் வாங்கிப்
பிறந்தவளா என்ன ?
எல்லாம் உனக்கு
அத்துப்படி…..

உன் பெயரை
மேடையில்
உச்சரிக்கும்போதெல்லாம்
ஆர்ப்பரிக்கும் கரவொலி
அடங்க நேரமாகும்..

பாடலின் பல்லவியில்
பரிசினை உறுதி செய்வாய்..
தாளமிடும் பாவனையில்
உணர்ச்சிகளை உலவ விட்டு
உயிர்களை வதமிடுவாய் ..

ஆட்டப்போட்டிகளில்
அதிசயம் நிகழ்த்துவாய்.
புள்ளிமான் குட்டியெனத்
துள்ளியே
நீ குதிப்பாய் ..
கடைசி நிமிடங்களில்
குடை ராட்டினமாய்ச்
சுற்றிடுவாய்…

போட்டி முடிவுகள் முழுதும்
உன் முகவரிக்கே  சேரும்..
முணுமுணுக்கும் உதடுகளும்
உனைக்கண்டு
புன்முறுவல் பூக்கும்..

நாடகமேடையினில்
ஐம்புலன்களை
ஒன்று சேர்த்து
அதிசயம் நிகழ்த்துவாய்..

உன் தலை
குனியக் குனிய
கழுத்தில் சூட்டப்படும்
மெடல்கள்
தாளம் தட்டிப்பாடும்..

இறுமாப்புக் கொள்ளாமல்
வெள்ளந்தியாய் சிரிக்கும்
உன் சிரிப்பொலிகள்
கொஞ்சமும்
கலப்படமில்லாதவை
கர்வப்படாதவை…

காலத்தின் கோலம்
மெடல்கள் சுமந்த கழுத்து
தாலியைச் சுமக்க
உன் நினைவுகளை
என்னுள்
சுத்தமாய்த் 
துடைத்து விட்டுப் போனாய்..

பரதம் பயின்ற
உன் பாதம் படுமிடம்
கோயிலாகும்..
ஆனால்..
உனக்கு மட்டும்
என்ன ஆனதோ?

தாலி சுமந்த கழுத்து
சிலுவை பாரம் சுமந்ததா?
செல்லரித்துப் போன
கல்லூரிப் புகைப்படமானதா
உன் வாழ்வு ?

நீ நல்ல நடிப்புக்காரிதான்.
வீட்டிலும் வெளியிலும்
நன்றாக நடிக்கிறாய்..
ஒப்பனையில்லாமல்..

ஒன்றிரண்டு
தருணங்களில்
ஓரமாய் நின்று
பார்ப்பதன்றி
உறவென்று சொல்லிக்கொள்ள
உனக்கும் எனக்கும்
ஒன்றுமில்லாமல் போனது..

கண்களைக் கண்ணீர்
மறைக்க
நடுவராக என்னை
அறிமுகம் செய்கிறார்
நிகழ்ச்சிப் பொறுப்பாளர்..
எழுந்து சென்று
வணங்குகிறேன்
நீ நின்ற
இடத்தருகில்..

மனசு மட்டும்   மௌனமாக..
வாழ்க்கை வெறுமையாக..

சிலுவைகளை
நீ சுமக்க..
என் நெஞ்சில்

ஆணிகள் …a