Blogger Tricks

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Pages

திங்கள், 19 மே, 2014

நெ(வ)ஞ்சம் நிறைந்தவன்

நெ(வ)ஞ்சம் நிறைந்தவன்

கண்ணாளா !
நான்
பூப்பெய்திய நாள் தொடங்கி
எந்தச் சலனங்களுக்கும்
சம்மதிக்காத
என் நெஞ்சம்
உன்னைக் கண்ட
நாள் முதலாய்
பூத்துக் கிடந்தது
உன் நினைவுகளில் .

கண்களில் பதிந்த
உன் உருவத்தின்
காலடித்தடம் கேட்கக்
காத்துக் கிடந்தது
உன் வருகைகளில் .

நேரெதிர் நின்று
எவரிடமும்
பேசியறியாத நான்
உன் தாக்கும் விழி
எதிர்கொள்ள
ஆசைப்பட்டாலும்
சில வேளைகளில்
நிலை குலைந்து
போனதுண்டு
உன் நேசம் கண்ட
என் பெண்மை.

என் கரம்
இறுகப் பற்றி
வலம் வந்த போது தான்
உணர்ந்தேன்
உனது உரிமையை
மணமேடையில்.

அந்த  உரிமைதான்
என் வாழ்வை
வறிதாக்கியதோ ?
என் கனவுகளை
வற்றச் செய்ததோ?
கண்களைக் குளமாக்கியதோ ?

நீ
வார்த்தைகளைத் 
தேடித் தேடி
என்னை
வருணித்தபோதெல்லாம்
வசந்தம்
வந்துபோனதை
உணர்ந்தேன்.
இன்று உனக்கு
என்ன ஆயிற்று?
இன்று
உன் நாவிலிருந்து
விடுபடும்
ஒவ்வொரு சொற்களிலும்
ரத்த வாடை அடிக்கிறது.

எனைத்
தோள் சாய்த்து
ஆசையாய்த் தலைக்கோதி
அன்பாய் வருடியபோதெல்லாம்
உன் இதயத்தின்
வாசம் உணர்ந்தேன்.
இன்று
உன் விரல்கள் தோறும்
புலி நகங்கள்
முளைத்த
குரோதம் ஏனடா ?

தூங்குவதற்குத்
தூக்கணாங்குருவிக்கூடு
போதுமென்றேன்.
பெருங்கண்ணாடி மாளிகையில்
ஒரு பொன்வண்டாய்
என்னைக் குடியமர்த்தினாய்.
வண்ண மனம் பரப்பினாய்.
பேதை நான்
மயங்கித் தொலைத்தேன் .

உன்னால் செய்யப்பட்ட
வசதிகள் எல்லாம்
மீனுக்கு வீசிய
புழுக்கள் என்பதைச்
சற்றுக் காலம் தாழ்த்தியே
உணர்ந்தேன்,

ஏனெனின்,
என் அன்னை
எனக்கு
அம்புலியைக் காட்டி
அமுதூட்டியவள்.
இன்றும்
அதே அறியாமையில்.

அன்பனே !
ஆன்மா
வலியெடுக்கும்போதெல்லாம்
ஏனென்று கேட்டால்
எதிர்ப் பேச்சு என்கிறாய்.
ஊமையாய் நின்றால்
வாய்க் கொழுப்பு என்கிறாய்.
அகராதியில்
உனக்கு எல்லாம்
அத்துப்படி.யோ ?

அப்பொழுதெல்லாம்
நீ  வரும்பொழுது வரும்
வாசங்களிலெல்லாம்
பூக்களாய்ச் சூடினேன்.

இப்பொழுது
வாங்கி
வரும் பூக்களிலெல்லாம்
சாக்கடையின்
ஈக்கள்
மொய்ப்பதை உணர்கிறேன்.

ஐந்து விரல்களின்
அன்புக்கரங்களால்
தாங்கினாய்.
அதிசயித்துப் போனேன்.
அவை
ஆக்டோபஸ் ஆனதை
மெல்ல உணர்கிறேன்.

சிபிச் சக்கரவர்த்தியின்
நீதி மன்றத்தில்
உனக்குத் தரப்பட்ட
நியாயத் தராசில்
அம்போடு நின்று
நியாயம் பேசுபவனே?
புறாக்கள்
உனது உரிமையென்று
அகந்தையில் கூவுகிறாய் .

நண்பனே !
வாழ்க்கையில்
என்றேனும் கேட்டதுண்டா
மலரிதழ் திறக்கும்
ஓசையினை ?
எங்கேனும் நுகர்ந்ததுண்டா
இதழ் விரிந்து
மணம் வீசும் தென்றலை ?

மூச்சுக் குழல்வரை
மெல்ல உறிஞ்சினாயா
மண் முத்தமிட்ட
மழைத்துளியின்
வாசனையை ?
பாவம் .
நீ இயந்திரம் தானே !
உன்னால்
உருவாக்கப்பட்டக் காயங்கள்
உறங்காத குழந்தையாய்
அடிக்கடி
அடம் பிடிப்பதால்
விழித்துக் கிடக்கின்றன
நட்சத்திரங்கள் பூத்துச் சிரிக்கும்
என் அழகிய இரவுகள்.

விழிகளை மூடாது
தனித்துப் புலம்புகின்றன
கண்ணீரில்
குளித்துக் கரையேறிய
என் இமைகள்.

உன்னோடு
தொடர்ந்த பயணத்தில்
சிறகொடிந்து கிடக்கின்றன
முதுமை வரையிலும்
நீண்ட
என் கனவுகள் .

தினம் தினம்
என் கண்ணீரில்
குளிப்பவனே !
ஒரு நாளேனும்
கங்கையில் குளித்து வா!
மறு ஜென்மத்திலாவது
மனிதனாய்ப் பிறக்க .
பிறக்கும் குழந்தையின்
பாவம் போக்க. 

ஞாயிறு, 18 மே, 2014

ஒரு புகைப்படம் சொல்லும் கதை


ஒரு புகைப்படம் சொல்லும் கதை

பத்தியேற்றிப்
பழுப்பேறிப்போன
அப்பாவின் புகைப்படம்
சுவற்றில்
சிதிலமடைந்து கிடந்தது
நான் பயின்ற
ஆரம்பப் பாடசாலைப் போல
அது
ஆயிரம் கதைகள் சொல்லும்.

எனக்கு
நினைவு தெரிந்து
முதன் முதலாகப் பார்த்த
அப்பாவின் முக அழகு
புதிய பள்ளிக் கட்டிடம் போலப்
பளிச்சென்றிருக்கும்.

முகம்
சுத்தமாக மழிக்கப்பட்டிருக்கும்
தூய்மை செய்யப்பட்ட
பள்ளி வளாகம் போல
அழகு பூத்துக் கிடக்கும்.

சட்டைப்பையை
மீறிப்பார்க்கும்
மூக்குக் கண்ணாடி
குவியமாய் என்றும் நிற்கும்
நேர்மையில்.

கையில்
வெற்றிலைப் பெட்டி
பள்ளியின்
சோதனைக் கூடம் போல.
வெற்றிலையும்,பாக்கும்
தனித்தனி அடைப்புக்களில்
சுண்ணாம்பு சிறிய வட்டப் புட்டியில்.

தோளில் போட்ட துண்டு
வாத்தியாரை நினைவூட்டும்.
சலவை மடிப்போ
ஒழுக்கத்தைப் போல .
கலையாமல் இருக்கும்.

எனக்கு
நினைவு தெரிந்த
நாளிலிருந்து
அப்பா
நினைவிழந்த நாள் வரை
சட்டைப்பயில்
பேனா ஒன்று
நீதிபதியின் கையிலுள்ள
சுத்தியல் போல
செருகிக் கிடக்கும்.

அப்பா,
படமாகிப் போனார்.
புகைப்படத்தை
எங்கிருந்து பார்த்தாலும்
என்னையே பார்க்கும்
தோரணையில்
ஒரு
தலைமையாசிரிரைப் போல
என்னையே பார்க்கும்
பார்வை.

சுருங்கிப்போன
அந்த உதடுகள்
எவ்வளவு
கதைகள் சொல்லியிருக்கும்?
ஒரு
நீதிபோதனை ஆசிரியர் போல.
பேச்சில்
கனிவும் குழைவும்.

சில வேளைகளில்
கணக்கு ஆசிரியர் போல
கடுமை மட்டுமல்ல
கண்டிப்பும்
வந்து விழும்.

காலையில்
பணிக்குச் செல்லத்
தொட்டு வணங்கும்போது
கொஞ்சம் கலக்கமாய்
இருக்கும்.
மாலையில்  திரும்பி வந்து
கண்ணுறும்போது
முகம் மலர்ச்சியாய்
இருக்கும்.
எல்லாம் மனப்பிரமைகள்
என்று மனசு சொன்னாலும்
ஏற்காது மனசு.

அப்பாவின் பார்வையில்
ஆயிரம் அர்த்தங்கள்
ஒளிர்கின்றன.

அருகிலிருந்து
வளர்த்த போது
அன்புக் கட்டளைகளையெல்லாம்
மீறிய மனசு
அப்பா
புகைப்படமாகிப் போனபோது
பணிவும் பாசமும் காட்டுகிறது

காலம் கடந்தும்
அனுபவமும்
அறிவுரையும் சொல்கிறது
இந்தப் புகைப்படம்.

இழப்பினைத் தேடும்
மகனே !
அம்மா இன்னும்
உன் அருகிலேயே
இருக்கிறாள்.
என்னிடம் இழந்தவைகளை
மீட்டுக் கொள் என்று.

முரண்டு பிடித்த மனசு
முதன் முதலாய்
மண்டியிடுகிறது
அப்பாவின்
புகைப்படம் முன்னால்.

இன்னொரு
வசந்தத்தின்
வருகைக்காக
நெஞ்சம் ஏங்கிக் கிடக்கிறது..