Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Sunday, May 18, 2014

ஒரு புகைப்படம் சொல்லும் கதை


ஒரு புகைப்படம் சொல்லும் கதை

பத்தியேற்றிப்
பழுப்பேறிப்போன
அப்பாவின் புகைப்படம்
சுவற்றில்
சிதிலமடைந்து கிடந்தது
நான் பயின்ற
ஆரம்பப் பாடசாலைப் போல
அது
ஆயிரம் கதைகள் சொல்லும்.

எனக்கு
நினைவு தெரிந்து
முதன் முதலாகப் பார்த்த
அப்பாவின் முக அழகு
புதிய பள்ளிக் கட்டிடம் போலப்
பளிச்சென்றிருக்கும்.

முகம்
சுத்தமாக மழிக்கப்பட்டிருக்கும்
தூய்மை செய்யப்பட்ட
பள்ளி வளாகம் போல
அழகு பூத்துக் கிடக்கும்.

சட்டைப்பையை
மீறிப்பார்க்கும்
மூக்குக் கண்ணாடி
குவியமாய் என்றும் நிற்கும்
நேர்மையில்.

கையில்
வெற்றிலைப் பெட்டி
பள்ளியின்
சோதனைக் கூடம் போல.
வெற்றிலையும்,பாக்கும்
தனித்தனி அடைப்புக்களில்
சுண்ணாம்பு சிறிய வட்டப் புட்டியில்.

தோளில் போட்ட துண்டு
வாத்தியாரை நினைவூட்டும்.
சலவை மடிப்போ
ஒழுக்கத்தைப் போல .
கலையாமல் இருக்கும்.

எனக்கு
நினைவு தெரிந்த
நாளிலிருந்து
அப்பா
நினைவிழந்த நாள் வரை
சட்டைப்பயில்
பேனா ஒன்று
நீதிபதியின் கையிலுள்ள
சுத்தியல் போல
செருகிக் கிடக்கும்.

அப்பா,
படமாகிப் போனார்.
புகைப்படத்தை
எங்கிருந்து பார்த்தாலும்
என்னையே பார்க்கும்
தோரணையில்
ஒரு
தலைமையாசிரிரைப் போல
என்னையே பார்க்கும்
பார்வை.

சுருங்கிப்போன
அந்த உதடுகள்
எவ்வளவு
கதைகள் சொல்லியிருக்கும்?
ஒரு
நீதிபோதனை ஆசிரியர் போல.
பேச்சில்
கனிவும் குழைவும்.

சில வேளைகளில்
கணக்கு ஆசிரியர் போல
கடுமை மட்டுமல்ல
கண்டிப்பும்
வந்து விழும்.

காலையில்
பணிக்குச் செல்லத்
தொட்டு வணங்கும்போது
கொஞ்சம் கலக்கமாய்
இருக்கும்.
மாலையில்  திரும்பி வந்து
கண்ணுறும்போது
முகம் மலர்ச்சியாய்
இருக்கும்.
எல்லாம் மனப்பிரமைகள்
என்று மனசு சொன்னாலும்
ஏற்காது மனசு.

அப்பாவின் பார்வையில்
ஆயிரம் அர்த்தங்கள்
ஒளிர்கின்றன.

அருகிலிருந்து
வளர்த்த போது
அன்புக் கட்டளைகளையெல்லாம்
மீறிய மனசு
அப்பா
புகைப்படமாகிப் போனபோது
பணிவும் பாசமும் காட்டுகிறது

காலம் கடந்தும்
அனுபவமும்
அறிவுரையும் சொல்கிறது
இந்தப் புகைப்படம்.

இழப்பினைத் தேடும்
மகனே !
அம்மா இன்னும்
உன் அருகிலேயே
இருக்கிறாள்.
என்னிடம் இழந்தவைகளை
மீட்டுக் கொள் என்று.

முரண்டு பிடித்த மனசு
முதன் முதலாய்
மண்டியிடுகிறது
அப்பாவின்
புகைப்படம் முன்னால்.

இன்னொரு
வசந்தத்தின்
வருகைக்காக
நெஞ்சம் ஏங்கிக் கிடக்கிறது..

No comments:

Post a Comment