Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Sunday, December 14, 2014

இருள்..

இருள்..
காற்று
சன்னலைத் திறந்து விட
நீண்டு ஒலிக்கிறது
ஒரு சில்வண்டின்
ரீங்காரம்..
வயிறு
நிறையாததன் வலியில்
ஈனமாக ஓலமிடும்
நாய்களோடு
மனிதர்களும்
தாயின் மார்பகம் தேடித்
தவிக்கும் குழந்தையாய்
படுக்க இடம் தேடும்
பாதசாரி..
பகலைக் குடித்து
இரவில் வீடு திரும்பும்
ஒரு கூலியின்
பழைய மிதிவண்டி
இரவினைத் தூங்க வைக்கத்
தாலாட்டுப் பாடுகிறது
கலைந்து போன
காதலைக்
கண்ணீரால் கழுவும்
ஒரு துக்கத்தின் ராகம்
விசும்பலாக
தூரத்தில்
விட்டு விட்டு
ஒலிக்கிறது….
பனிவாடைக் காற்றில்
பூத்த மரமல்லி
விட்டத்தின் வழியிறங்கி
வாசத்தால் போர்த்துகிறது
சுகந்தப் போர்வையால்
கடைசி வீட்டுச் சேவல்
நினைவூட்டிக்கொண்டே
இருக்கிறது
இன்னும்
உறங்கவில்லையென்றும்
ஏன் விடியவில்லையென்றும்
மதகின்வழி பாயும்
வெள்ளம்
சுழித்துச் சென்று
ஹோவெனக் கூவும்
பேரிரைச்சல்
துல்லியமாகக் காதில் விழ
மனம் இன்னும் கூர்மையாக !
நாளை வரும்
மகளுக்கான வரன்
குணமுடையதோ ?
குறையுடையதோ ?
சாதகம் சாதகமாகுமோ ?
எதிர்பார்ப்பு என்னவோ ?
ஏக்கம் நிரம்ப
தூக்கம் விடைபெற
மனைவி , மக்கள் ,
ஒவ்வொருவர் நெஞ்சங்களும்
நேர்த்திக் கடன்களைச்
செபங்களாக்கக்
இருள் கவ்விக் கிடக்கிறது
இரவு ..
பலமாக அடிக்கும்
காற்றில்
கிறீச் கிறீச் எனச்
சத்தம் எழுப்புகிறது ..
சுவற்றில் மாட்டப்பட்ட
அப்பாவின் புகைப்படம்
மனசுக்கு ஆறுதல்..

இருள் பரவிய மனதில்
வெளிச்சம்
விரைந்தோடுகிறது….
இருளை விரட்டி வருகிறது..
வண்டியில் பூட்டி
இலக்கு நோக்கிச் செல்லும்
வண்டிமாடுகளின்
கழுத்து மணியோசை

No comments:

Post a Comment