மார்கழிப் பூவே ..
அன்பே !
இனிய விடியலில்
வாசலின் ஓரம்
நீ பூக்கவிருக்கும்
மார்கழி மாதம்
பீடை மாதமென்று
யார் சொன்னது
?
நீ !
வீட்டுக்கதவு திறக்குமுன்னே
வாசற்புறமெல்லாம்
பனித்துளி நீர்
தெளித்திருக்கும்
வாடைக்காற்று
தூசு துடைத்திருக்கும்.
வானவில்லின் வண்ணங்கள்
கோலப் பொடியாயிருக்கும்.
எண்ணங்கள் வண்ணக்
கோலங்கலாய்ப் படர்ந்திருக்கும்.
உன்
முகத்தாமரைக் கண்டபின்னே
பொழுது சற்றுப்
புலரத் தொடங்கும்.
அம்மன் கோயிலின்
பாடல் புறப்பட்டு
உன் செவிகளைத்
தாலாட்டும்.
உன்
மென்பஞ்சு விரலிரண்டு
கோலத்தைச்
சிலந்தியெனக் கூடுகட்டும்.
முன்னே கவிழ்ந்து
விழும்
உன் கற்றைத் தலைமுடி
காற்றிலாடி, காற்றிலாடி
உன் காதோரமாய்ச்
சற்றொதுங்கி
என் வருகையை அறிவிக்கும்.
உன் தலை சற்று நிமிர்ந்து
காலையில் பூத்த
நட்சத்திரமாய்
கண்கள்
காதல் வணக்கம்
சொல்லும்.
உன் முகத்தாமரையில்
தேன் குடித்த
வண்டு விழி
ஒரு மயக்கத்தில்
எனை நோக்கி வெறிக்கும்.
உதடுகளோ
உள்ளத்தை வெளிப்படுத்தத்
தயங்கி நிற்கும்.
ஒவ்வொரு வருடமும்
உன் பார்வையைப்
போலவே
பொருள் ஏதும்
விளங்காமலேயே போயின
நீ புள்ளி வைத்துப்
போட்ட
வெல்கம் கோலமும்
நல்வரவு கோலமும்.
தை பிறந்தால்
வழி பிறக்குமாம்.
ஆம் !
இந்த ஆண்டு உனக்கு
வாழ்க்கைப் பிறக்கப்
போவதாய்
உன் அப்பனோடு சேர்ந்து
அசலூரும் பேசுது.
பூத்துச் சிரித்து
வாசம் பரப்பிய
உன் வீட்டிலிருந்து
யாரோ ஒருவன் தோளுக்கு
நீ மாலையாகப் போகிறாயாம்
.
தை மாதங்களில்தான்
காதலும் கண்களும்
களவாடப்படும்.
இதோ !
மார்கழியின் கடைசி
நாள்.
வீட்டு வாசலை அலங்கரிக்க
மான்குட்டியாய்த்
துள்ளி வந்து
மாக்கோலமிடுகிறாய்.
ஏதுமறியாக் குழந்தையாக
!
இனி வரப்போகும்
மார்கழிகளில்
உன் வீட்டு
வாசலுக்கு மட்டுமல்ல
வெறுமை.
என் மனசுக்கும்
தான்.
மணமாலையோடு
நீ புறப்படத் தயாராகும்
தை மாதம்
இனி என் வாழ்வில்…….
?
வணக்கம் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது ...
ReplyDeleteவாழ்த்துக்கள்
அறிமுகம் செய்தவர் குருநாதசுந்தரம்
link is here click now!