Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Friday, March 21, 2014

 அன்னக்கிளி

அன்னக்கிளி !
எழுபத்தைந்துகளில்
கிராமத்து வீதிகளை
எழுச்சி பெறச் செய்த
தேசிய கீதம்.
வாலிபப் பெண்களின்
விடியலின் கானம்.

பச்சைக்கிளிகளின்
பசிய வண்ணம்
கண்ணுக்கு இதம்
இனிய கானம்
நெஞ்சுக்கு வரம்.

ஒரு புதியவரின்
இசையின் இளையவரின்
இசைக்கோலம்
தாவியோடும்
ஆற்று நீர்களிலும்
நெல் குவிந்த
களத்து மேடுகளிலும்
வயற்சேறுகளிலும்
பூத்துக் குலுங்கும்
நெற்கதிர்களிலும்
பதியம் போடப்பட்டது
அப்பொழுதுதான்.

காற்று அடிக்கும்
திசையெல்லாம்
அன்னக்கிளி
பாட்டாகச் சென்று
சேர்ந்தாள்.

அன்னக்கிளி உன்னைத் தேடுதே
நாற்று நடும் பெண்களின்
ஜீவ ஊற்றானது.

திரைக்கொட்டகைகளில்
கண்ணிமைக்காமல்
திரும்ப,திரும்ப
பார்த்து,கேட்டு,பாடி
நெஞ்சுக்குள்
பதியம் போட்ட காலம்
இன்று
நினைவுக்குள் வருகிறது.

கிராமத்து வாத்தியார்கள்
பெட்ஷீட்,தலையணை
சூட்கேஸ்களுடன்
பயணமாயினர்
தழைய தழைய வேட்டியோடும்
வெளுத்த சட்டையோடும்.

சொந்த பந்தமில்லாதவர்கள்
அன்னக்கிளிக்குத்
தங்கையானார்கள்
சரிந்த கொண்டையோடு.

ஜவுளிக்கடைகள்
புளியம்பூச்சேலைகளால்
பூத்துக் கிடந்தன.
கணுக்கால் மேலே
சேலைகள்
பூரிப்புக் கொண்டன
தண்டையோடு.

கருத்த மைப்பொட்டு
மூன்று புள்ளி அச்சோடு
விற்றுத் தீர்ந்தன.

வளையல்காரர்கள்
உறக்கத்திலும்
கூவித்தொலைத்தனர்
அன்னக்கிளி பொட்டு என்று.

ஜானகி அம்மா
குரல் கசிவில்
அன்னக்கிளி காதுகளின் ஓரம்
வந்து சேர்கிறபோதெல்லாம்
கண்கள்
குளம் கட்டிப்போகும்.

என்  அன்னக்கிளி
வண்ணக்கிளி அல்லள்.
கறுப்பு வெள்ளையில்
ஜொலித்த
தங்கக்கிளி.

நான் வாத்தியார்.
என் அன்னக்கிளி
தொலைந்து போனதெங்கே ?

மண்ணை மேடாக்கி
மனசை இதமாக்கி
இரண்டாம் ஆட்டம் பார்த்த
அந்த நினைவுகளை
இன்றும் சில
இரவுகளின் மிச்சம்
எழுதிப் பார்க்கிறது
அன்னக்கிளி எங்கே என்று !

No comments:

Post a Comment