பயணங்கள்
·
பயணம்
பாவமானதா?
அபாயமானதா?
அதனால் தான்
பிறந்த பின்
அழுதேன் போலும்.
·
தோள்களில்,கரங்களில்
மார்பினில் பயணங்கள்
இனிய மயக்கம் தான்.
·
இடுப்பில் நழுவும்
உடுப்பை இழுத்து
தோள்களில்
மஞ்சப் பையைச்
சுமந்து
அறிவுத் தேடலில்
ஆரம்பமான பயணம்
அலாதியானது.
·
நெஞ்சில் துக்கம்
விழிகளைத் தாக்க
பட்டங்கள் பல
கைகளில் தவழ
வேலையைத் தேடி
அலைந்த
பாதப் பயணம்
நின்று அசை போடுகையில்
அலாதியானதுதான்
.
·
மெத்தைகளில்
வீழ்ந்த பின்னும்
சுற்றிக் குளிர்
பரந்த பின்னும்
விழிமூட மறுக்கும்
இமைகள்.
மனம்
பொதிமாடுகளைப் போல்
ஆசைகளைச்
சுமந்ததால்.
·
அலுப்பைத் தட்டும்
நகர வாழ்க்கையில்
வேலை,உணவு
மனைவி,பிள்ளைகள்
இருந்தும்
அயர்ந்து உறங்க
விழிகள்
எங்கே கிடைக்கும்?
·
இனிக்கும் தேனீர்
கசக்கிறது.
பச்சை மிளகாய்
சுவைக்கிறது.
·
வாழ்க்கைத் தந்த
அனுபவம் இதுதான் போலும்…
·
கூடு துறக்கும்
பறவைகள் போல
கண்களால் மெல்லச்
சிறகடிக்கப் பழகு.
மயங்கும் மனசை
வானவெளியில்
தூக்கிப் போடு .
அவை சிறகுகளைப் போல
மேகங்களாய்த் தவழட்டும்.
·
வாழ்க்கை தந்த
பயணங்களில்
ஒரு நீர்வீழ்ச்சியைப் போல
வீழ்கிறேன்.
சின்ன மேகமாய்
எழுந்து உலவுகிறேன்.
·
பயணம் சுகமானதுதான்
துறப்பதற்குத்
துணிந்து விட்டால்……
No comments:
Post a Comment