Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Thursday, December 31, 2015

ஊர்க்குருவிகள்

                                                              
  ஊர்க்குருவிகள்
·         விதைக்கும் முன்னே
முளைக்கத்துடிக்கும் விதைகளுக்கு
வீரியம் அதிகம்தான்.
ஆனாலும்
சில முளைத்தும் பயனில்லை.

·         முட்டையிலிருந்து
பறவைகள் விடுபடுகிறபொழுதே
சில பறக்க எத்தனித்து
சிறகை ஒடித்துக்கொள்ளும்
சோகம் நிகழ்வதைக்
கவனிக்கத் தவறுகின்றன
ஆர்வ மிகுதியால்.

·         அரும்புகள் அழகுதான்,
கொடிகளின் நுனிகளில்
ஊஞ்சலாடும்வரை.
ஆனாலும்,
தலையில் சூடிக்கொள்ள
தயங்கும் மனம்.
பின் மலர்மாலையாவது
எப்படி?

·         மனம்
ஓடிவருகின்ற
ஆற்றுநீர் போல
அமைதிகொள்வதில்லை.
அது,
வானத்தில் வசீகரிக்கும்
வளைந்து கிடக்கும்
வானவில்லை
வளைக்க நினைக்கின்றன.

·         மண்ணுடனான
தொப்புள்கொடி உறவை
தனக்கு மட்டுமே
சொந்தம் எனக்கொண்டாடும்
சுயநலங்கள்
மண்ணுக்கு மேலே
மண்டிக்கிடக்கும்
மரங்களை
மனம் கொள்வதில்லை.

·         சூரியக் கிரணங்களைக்
கைகளால் மறைக்க
திறமை போதாமல்
அறிவை வளர்க்க
அவசரப்படும் உலகமே,
அப்பாவியாக
ஊர்க்கதைப்
பேசிப்பயனில்லையே !

·         வல்லூறுகளின் வலிமை
அதை ,வானத்தில்
பறக்க வைக்கின்றது.
ஊர்க்குருவிகள்
அண்ணாந்து
உயரே பார்க்காமல்
நரிகளென ஊளையிட்டு
ஊருறங்குகையில்
உள்ளங்கைகளைக்
கடிந்துகொள்கின்றன
உதவிக்கு வரவில்லையென்று.

·         அந்தியில்
வெளுத்த வானம்
ஒருபொழுதும்
வஞ்சித்ததில்லை
மக்கள் மனசு போல.
அது,
வானம்பாடிகளுக்கு
இறக்கைகளைக் கொடுத்தது
மேலே மேலே பறப்பதற்கு.
மனத்தைச் சுகமாக்கு
மேன்மேலும் உயர்வதற்கு.
வாழ்க்கை அழகியது.
அதை

அழுக்காக்காதே!

No comments:

Post a Comment