Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Thursday, December 31, 2015

தீப ஒளித் திருநாள்……….

·        வருடந்தோறும் வருகின்ற
வானவேடிக்கை.
வசதியானவர்களால்
வாழ்த்துப்பா பாடப்படுகின்றது.
வறியவர்களால்
வயிறெரியப்படுகின்றது.

·        அழகு ஆடைகள்
அசல் விலையை மறைக்க,
குடிசை வீட்டுக்காரி
கண்ணாடிக் கடைகளை
வெறித்துப் பார்த்துப்
பாதையோரமே
நமக்குப் பழக்கப்படுவதாக
விதியை எண்ணி,
குழந்தைகளை
விலைமதிப்பில்லா
பளபளக்கும் சரிகையாடையால்
மகிழ்ச்சிப்படுத்துவாள்.

·        ஆண்டுதோறும் அன்பை
அணுவளவேணும்
அறிந்திடா அண்ணன்,தம்பிகள்,
அக்கா,தங்கைகளுக்கு
அவசரகதியில் அனுப்புகின்றனர்
தீபாவளிச் சீரை
வாடிக்கையாக
வங்கிக் கணக்கில்.
சேமிப்பு எண்கள் மட்டுமே
சகோதரப்பாசத்தால்
இதயங்களைத்
தழுவுகின்றன.

·        இப்பொழுதெல்லாம்
தீபாவளியெனின்
பள்ளி மாணவனும்
மதுவின் வாசனையைத்
தேடுகின்றான்.
கல்வி கற்கும் காலங்களில்
கனவு.
கனவிலேனும்
கல்வியை அறிந்தானா?
பதில் சொல்லுமே
காலம்.

·        கல்லூரிக் கனவுகள்
கொஞ்சம் அதிகம்.
அப்பாவை அம்மாவை
கொஞ்சம் மிரட்டிப் பார்க்கும்.
காதைக் கிழிக்கும்
வானவெடியாய் சத்தம்.
சூழ்நிலை மறந்து
மயக்கம் கொள்ளும்.
ஒரே மோட்டார் வண்டியில்
வித்தைகள் காட்டும்.
ஆற்றுநீர் ஓடி வருவதுபோல்
வண்டியில் உல்லாசம்
காண்போரைக் கண்டு
காட்டுக் கூச்சல் போடும்.
வயதை மீறிய பேச்சு.
காலக் கொடுவினையா?



·        கையில் மகனைப்
பிடித்துக் கொண்டு
சாலையோரம் சற்று
பயந்து ஒதுங்குகையில்
பாவம் இவர்களின்
பெற்றோர் எனச்
சின்ன நினைப்பினூடே
வந்து போகிறார் அப்பா!
அப்பா ………….
எத்தனை முறை
சங்கடப்பட்டிருப்பார்?
காலம் கற்றுக்கொடுக்கிறது

அனுபவங்களை.

No comments:

Post a Comment