Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Sunday, June 23, 2013

 ஒரு மௌன விசும்பல் 

*     வாலிபக் கனவுச்  சந்தையில்
என் வாழ்க்கைக்
களவாடப்பட்டுவிட்டது.

*     என் சுயம்
தீயாய்ப் பற்றி எரிய
சித்தன் பார்த்துச்
சிரிக்கின்றான்.

*     கண்கள் சொறிகின்றன
சிவப்புக் கண்ணீரைக்
கன்னக் குழிகளில்.

*     குப்பை மேடுகளிலோ
முல்லைப் பூக்கள்
சிரிக்கின்றன.
என் நடுவீடுதனில்
வெள்ளெருக்குப் பூக்கிறது.

*     என் மனத்தோட்டத்து
சாமந்தி மெல்லவே
சிரிக்கிறது.

பச்சையம் தரும் பகலவன்
நஞ்சை உமிழும்
நாகரிகமும் நிகழ்கிறது.

*     என் கைரேகை தேய்ந்த
கதை கேட்க யாருமில்லை.
ஆனால் ,
ஆயுள் ரேகை பார்க்க
ஆவல் பிறக்கிறது.
ஏனெனில்
நான் அட்சய பாத்திரம்.

*     பாழாய்ப் போன
பஞ்சடைந்த கண்களுக்குப்
பாம்பின் படம்கூட
பசுமையாகத் தெரிகிறது.
சங்கடங்கள்
தொடரும் வாழ்வில்
பாகற்காய் இனிக்கிறது.

*     என்னைச் சுற்றிச் சுழலும்
வண்ண விளக்குகளின்
வாளிப்புகளின் நடுவில்
சின்ன குத்து விளக்கு
நானென்ன செய்ய முடியும்?

*     நீர் புரண்டு
படுக்குமிடமெல்லாம்
ஆற்றின் கரையோடு
மோதி விளையாடத்தான்
வேண்டியுள்ளது.
வழி வழியே ஓட வேண்டியது
நீரின் விதி.
நான் நீர்.

*     வண்டியில் பூட்டப்பட்ட
எருதுகளின்
கழுத்துச் சலங்கை போல
காலமெல்லாம்
புலம்ப வேண்டியதே
வாழ்க்கையென்றாகி விட்டது.

    வாழ்ந்து தொலைக்கப்பழகும்
போலித்தனங்களில்
ஒவ்வொரு நொடிகளும்
அரிதாரம் பூசும்.
கனவு கண்ட வாழ்க்கை
கண் முன்னே கரையும்,
ஒரு
மௌன விசும்பலில்.


No comments:

Post a Comment